இவற்றிற்கான களஞ்சியம் 'Tamil Nadu' வகை

May 26 2009


இந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு!

இந்தியா த‌மிழின‌ அழிப்பாளிக‌ளில் ஒருவ‌ர் என்ற‌ ப‌ட்ட‌த்தை, 25,000 ம‌க்க‌ளுக்கு மேல் கொன்றும், 30,‍‍000 ஆயிர‌ம் ம‌க்க‌ளை அங்க‌வீன‌ராக்கியும், 3,00,000 ம‌க்க‌ளுக்கு மேல் உள்நாட்டிற்குள்ளையே இட‌ப்பெய‌ர‌வைத்தும் நிரூபித்திருக்கிற‌து.

எங்க‌ள் த‌லைவ‌ரைக் கொல்ல‌த் துணைபோன‌திலிருந்து, இந்தியா த‌மிழ‌னின் துரோகி என்ப‌தை நெடுங்கால‌த்திற்கு உறுதியாக்கிவிட்ட‌து. த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் சிங்க‌ள‌ இராணுவ‌த்தால் அநியாய‌மாக‌க் கொல்ல‌ப்ப‌டுகிறார்க‌ளே என்று கூட‌ க‌வ‌லைப்ப‌டாம‌ல், த‌மிழின‌ அழிப்பிற்கு சிங்க‌ள‌ இராணுவ‌த்துட‌ன் துணை நிற்கிற‌து.

முன்பு இந்திய‌ “அமைதிப் ப‌டை” யாய் வ‌ந்து செய்த‌ க‌ற்ப‌ழிப்புக‌ள் போதாதென்று, இப்போது இந்தியா, இல‌ங்கை அர‌சின் கொள்கைக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ ஐநா வ‌ரை கைகோர்த்து நிற்கிற‌து. டென்மார்க் ம‌ற்றும் சுவிஸ் நாடுக‌ள் இல‌ங்கையின் ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளை ஆராய‌ வேண்டும்; அத‌ற்கு த‌னியாக‌ விவாதிக்க‌ வேண்டும் என்று ஒரு கோரிக்கை விடுத்த‌து. விடுத்த‌ கோரிக்கையை எதிர்த்து, அத‌ற்கு என்று தனியாக‌ விவாதிக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை என்று க‌டுமையாக‌ எதிர்த்த‌ நாடுக‌ள்: இந்தியா, பாகிஸ்தான், ம‌லேசியா. 17 நாடுக‌ள் இல்லை, ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ள் ப‌ற்றிய‌ த‌னிப்ப‌ட்ட‌ விவாவ‌த‌ம் வேண்டும் என்று கோரிய‌தால், இவ‌ர்க‌ள் எதிர்ப்பு முறிய‌டிக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ முறிய‌டிப்பை எதிர்த்து இந்தியா, சீனா, எகிப்து ஆகிய‌ நாடுக‌ள் ஐநாவை புற‌க்க‌ணித்து வெளிந‌ட‌ப்பு செய்திருக்கின்ற‌ன‌. இன்று இந்த‌ ம‌னித‌ உரிமை மீற‌ல் த‌னிப்ப‌ட்ட‌ விசார‌ணைக்கு வ‌ருகிற‌து. இன்ற‌ய‌ தின‌த்தில் இல‌ங்கைக்கு எதிராக‌, அல்ல‌து ஆத‌ர‌வாக‌ எத்த‌னை நாடுக‌ள் வாக்க‌ளிக்கின்ற‌ன‌ என்ப‌தைப் பொறுத்தே ம‌னித‌ உரிமை மீற‌ல் குறித்த‌ விசார‌ணை ஆர‌ம்பிக்குமா இல்லையா என்ப‌து தெரிய‌வ‌ரும்.

த‌ன் மான‌த் த‌மிழ‌னே, பாருங்க‌ள் உங்க‌ள் இந்தியாவின் கொள்கைக‌ளை. த‌மிழ‌ர் ப‌டையை அழிக்க‌த் துணை போய், எம் த‌மிழின‌த் த‌லைவ‌ரையும் கொல்ல‌த் துணை போய் முடிந்துவிட்ட‌து என்றாவ‌து… இனிமேலாவ‌து… த‌மிழ‌ன் ப‌க்க‌ம் நிற்கிற‌தா இந்த‌ இந்தியா? எங்கே அந்த‌ சில‌ பேர்வ‌ளிக‌ள், புலிக‌ளைத் தான் இந்தியா எதிர்க்கிற‌து; பிர‌பாக‌ர‌னைத் தான் இந்தியா எதிர்க்கிற‌து என்று ஐயோ கூயோ என்று கூச்ச‌லிட்ட‌வ‌ர்க‌ள். இந்தியா த‌மிழ‌னுக்கு அல்ல‌ எதிர்ப்பு, புலிக‌ளுக்குத் தான் என்று ஆணித்த‌ர‌மாக‌ வாதாடிய‌வ‌ர்க‌ள் எல்லாம் எங்கே? உங்க‌ள் முக‌ங்க‌ளை அங்கே இன‌ப்ப‌டுகொலையில் இற‌ந்துபோன‌வ‌ர்க‌ளுக்கும் இன்னும் ஏன் இற‌க்க‌வில்லை என்று நினைத்து வாடும் எம் த‌மிழின‌த்திற்குக் கொண்டு போய்க் காட்டுங்க‌ள்.

என‌க்கு என்ன‌ வினோத‌ம் என்றால், த‌மிழின‌த்திற்கு முற்றுமுழுதாக‌ ஆத‌ர‌வாக‌ நிற்க‌வேண்டிய‌ இந்தியா ஐநா ச‌பையில் இல‌ங்கைக்கு ஆத‌ர‌வாக‌ எதிர்ந‌ட‌ப்பு செய்திருக்கிற‌து. இதில் எந்த‌ வித‌த்திலும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாத‌ மேலைத்தேய‌ நாடுக‌ள், ம‌னித‌ நேய‌த்தைக் காப்பாற்ற‌வேண்டி த‌மிழ‌ர்க‌ள் சார்பாக‌ போராடி வ‌ருகிற‌து.

அன்றுதொட்டு என் க‌ருத்து, இந்தியா த‌மிழ‌னுக்கு ஒருக்காலும் உத‌வ‌ப் போவ‌தில்லை என்ப‌து தான்; அது த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌னாக‌ இருந்தால் கூட‌. இன்றுவ‌ரை 400 இற்கும் மேற்ப‌ட்ட‌ த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌ன் சிங்க‌ள‌ இராணுவ‌த்தால் கொலைசெய்ய‌ப்ப‌ட்டுள்ளான். போதாத‌ற்கு, ப‌ல‌ரின் உட‌மைக‌ள் அழிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன [வ‌ள்ள‌ம், வ‌லை போன்ற‌ன‌]‌; ப‌ல‌ர் ப‌ல‌ நாட்க‌ளாக‌ கைதுசெய்து வைக்க‌ப்ப‌ட்டிருந்திருக்கிறார்க‌ள். இவ்வ‌ள‌விற்கும், இந்தியா ஒரு ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்காம‌ல், மாறாக‌, த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌னையும் கொன்றொழித்த‌ சிங்க‌ள‌வ‌னுட‌ன் கைகோர்த்து ஐநா வ‌ரை போராடி வெளிந‌ட‌ப்பு வ‌ரை செய்கிற‌து.

“என்ன‌ கொடுமை சார் இது” என்று சொல்லி அழ‌வே தோன்றுகிற‌து.

2 responses so far

Apr 20 2009


தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா? – பா – 2

கருணாநிதி இப்போ சொல்லி இருக்கிறார் “பிரபாகரன் தன் நண்பர்” என்று.

சில வாரங்கள் முன், பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி, அவர் சக இயக்கங்களை அழித்ததிலிருந்தே எனக்கு அவரைப் பிடிக்காது என்று சொன்னவர். [பார்க்க தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா?]

எப்படி ஐயா இதெல்லாம் முடியுது?

உண்மையில் தமிழ் நாட்டுத் தமிழர்கள் அடி முட்டாள்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

No responses yet

Feb 09 2009


ராஜீவ் காந்தியின் கொலை உலக விசாரணைக்கு?

Filed under India,LTTE,Tamil Nadu

இந்த ராஜீவ் காந்தியின் கொலையை வைத்து தமிழர்களை பழிவாங்கிக்கொண்டே இருக்குதப்பா இந்த “இந்தி”யா.

உண்மையில் காங்கிரசிற்கும், அதன் கூட்டணி அமைப்பிற்கும், மற்றும் பினாமிகளுக்கும், ராஜீவ் காந்தியின் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்றால், இந்த விசாரணையை ஸ்கொட்லாண்ட் யார்ட் இடமோ, அல்லது வேறு ஒரு உலக விசாரணை நடத்தக்கூடிய ஒரு அமைப்பிடமோ கொடுத்து விசாரணை செய்யச் சொல்லுங்கள்.

தமிழக காங்கிரஸ் தலைமையோ, கூட்டணி தலைமையோ [ஜெயலலிதா], அன்று ராஜீவுடன் இல்லை. ஏன் என்ற சந்தேகத்தை மூடி மறைத்து, சும்மா புலி கொண்டுட்டு புலி கொண்டுட்டு என்று பறைசாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா எப்போதுமே தமிழர்களின் பக்கம் இல்லை. எங்கே இதை வேறு யாரும் விசாரணை நடத்தினால், உள் குட்டு உடைந்து விடும் என்ற பயத்தில் ராஜீவ் காந்தியை புலிகள் தான் கொலை செய்தார்கள் என்று பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.

எல்லோரும் சொல்வது/ நினைப்பது போல் உண்மையில் புலிகள் தான் செய்திருந்தார்கள் என்று ஆணித்தரமாக எண்ணினால், கொடுத்துப் பார்க்கட்டுமேன் இப்படியான ஒரு உலக விசாரணை நடத்தும் அமைப்பிடம். ஏன் மறுக்குறார்கள்?

One response so far

Nov 30 2008


[த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 4] தமிழ் நாடும் கேர‌ளாவும் 4 வித்தியாச‌ங்க‌ள்

த‌மிழ் ந‌ட்டில் த‌ரையிற‌ங்கி வெட்ப‌ த‌ட்ப‌ நிலையையும் உண‌ர்ந்த்தாச்சு. இனி என்ன‌ க‌ண்டேன் என்று பார்ப்போமா.

முன் இடுகைக‌ளில் இருந்து நான் பார்த்த‌ த‌மிழ் நாட்டைத் தான் சொல்கிறேன். க‌ன‌டாவில் கிட்ட‌த்த‌ட்ட‌ 15 வ‌ருட‌ங்க‌ள் வாழ்ந்துவிட்டேன். ஆகையால், இல‌ங்கையில் இருந்து த‌மிழ் நாடு போகிற‌வ‌ரின் பார்வை என் பார்வையில் இருந்து நிச்ச‌ய‌மாக‌ வேறுப‌டும்.

எங்க‌ள் வ‌ண்டி மேல்ம‌ருவ‌த்தூரில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற‌து.

வாக‌ன‌ங்க‌ள் மிக‌ நெரிச‌ல்க‌ளாக‌ ப‌ய‌ணித்த‌ன‌. ப‌ய‌ண‌த்தில் ந‌வீன‌ த‌மிழ் நாடும், ஏழ்மை த‌மிழ் நாடும் மாறி மாறி வ‌ந்த‌ன‌. அது என்ன‌ அது? சில‌ க‌ட்டிட‌ங்க‌ள்/ இட‌ங்க‌ளைக் க‌ட‌க்கும்போது ந‌வீன‌ ம‌ய‌மாக்கிய‌தாக‌ இருக்கும். வ‌டிவாக‌, சுத்த‌மாக‌ இருக்கும். வீதியின் அருகாமையில், ஏதோ ஷெல் விழுந்து இடிந்து போன‌ க‌ட்டிட‌ங்க‌ள் போல் க‌ட்டிட‌ங்க‌ளையும் காண‌க்கூடிய‌தாக‌ இருந்த‌து. நான் நினைத்தேன் இவை என்ன‌ ந‌ம்ம‌ ஊரில் உள்ள‌ க‌ட்டிட‌ங்க‌ள் போல் அல்ல‌வா இருக்கிற‌து. ப‌ல‌ சிறிய‌ கோவில்க‌ள் கூட‌ த‌விக்க‌ விட்ட‌ நிலையில் இருந்த‌ன‌.  கட்டிடங்களுக்கு உள் செடி கொடிகள் வளர்ந்து பராமரிப்பற்றும் காணப்பட்டன.

வாக‌ன‌ம் ஓட்டுத‌ல் என்றால், ஏதோ ஒரு ம‌யிரிழை த‌ப்பினால், இடி என்ற‌ மாதிரித் தான் எல்லோரும் ஓட்டுவார்க‌ள். TATA SUMO வில் [க‌ன‌டாவில் SUV] இல் 10 பேர் போனோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்க‌ளேன். ஆமாம், முன்னுக்கு மூன்று பேர், ந‌டுவில் 3 பேர், பின்னுக்கு 4 பேர். Auto வில் கூட‌ ஓட்டுந‌ருட‌ன் ஒருவ‌ர், பின்னுக்கு மூன்று பேர், அதில் ஒருவ‌ர் ம‌டியில் இன்னுமொருவ‌ர் என்று 6 பேர் மொத்த‌மாக‌ [ஓட்டுந‌ரையும் சேர்த்து] செல்வோம். வாக‌ன‌ நெரிச‌லான‌ இட‌ங்க‌ளில், ஓட்டுவ‌து மிக‌வும் க‌டின‌மாக‌ என‌க்குத் தென்ப‌ட்ட‌து. ஒருவ‌ர் விட்டுத் த‌ருவார் என்று பார்த்துக்கொண்டிருந்தால், அவ‌ர் ஜென்ம‌த்திற்கு எடுக்க‌வே மாட்டார். 3 – Point Turn என்ப‌து, ஒருவ‌ர் எடுத்துக்கொண்டிருக்கையிலேயே முன்பும் பின்புமாக‌, ம‌ற்ற‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள் பாட்டிற்கு ஏதும் ந‌ட‌க்காத‌து போல் போய்க் கொண்டிருப்பார்க‌ள். என்னைக் கேட்டால், இரு ச‌க்க‌ர‌ வ‌ண்டிக‌ளுக்கு என்றே த‌னி வீதி அமைத்தால் ந‌ல்ல‌து என்பேன். அவ‌ர்க‌ளும், மோட்டார் கார்க‌ளும் ஒன்றாக‌ப் போக‌த்தான் மிக‌வும் சிக்க‌லாக‌ இருக்கிற‌து. அட‌ இடிய‌ப்ப‌ச் சிக்க‌ல் என்பார்க‌ளே, அதைவிட‌ சிக்க‌லான‌துங்க‌. மாட்டு வ‌ண்டில்க‌ளும், மாடு இழுக்கும் ட‌ய‌ர் பூட்டிய‌ வ‌ண்டிக‌ளும் கூட‌ வீதிக‌ளில் க‌ண்டேன். இவ்வ‌ள‌வு சிக்க‌லுக‌ளுக்கிடையில், பொது ம‌க்க‌ளும் ஏதோ த‌ன் சொந்த‌ வீட்டில் ந‌ட‌ப்ப‌து போல், மிக‌வும் லாவ‌க‌மாக‌ வீதியைக் க‌ட‌ப்பார்க‌ள். ஆனால், என்ன‌ ஆச்ச‌ரிய‌ம், இவ்வ‌ள‌வு ம‌யிரிழை இடைவெளியில் ஓடினாலும் கூட‌, ஒரு சின்ன‌ கீற‌ல் கூட‌ விளாம‌ல் ஓடுகிறார்க‌ள் என்ப‌து உண்மையில் கெட்டித்த‌ன‌ம் தான்.

இப்ப‌டியே ஒரு காட்சியையும் க‌ண்டேன். ஒரு மிக‌வும் ஏழ்மையான‌ குடும்ப‌மா (அ) ப‌ல‌ குடும்ப‌ங்க‌ளிலிருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ளா என்று தெரிய‌வில்லை. அவ‌ர்க‌ள் ஒரு பெரிய‌ குப்பை மேட்டை ச‌ல்ல‌டை போட்டுக்கொண்டிருக்கிறார்க‌ள். வாக‌ன‌த்தில் போகும்போதே நாற்ற‌ம் தாங்க‌ முடிய‌வில்லை. என‌து த‌மிழ்நாட்டுப் ப‌ய‌ண‌த்தில் நான் க‌ண்ட‌ மிக‌வும் ஏழ்மையான‌ காட்சி இது தான். என் மூளையில் அந்த‌ நொடியில் உதித்த‌ சிந்த‌னைக‌ள். அடுத்த‌ வ‌ல்ல‌ர‌சு, IT இல் வ‌ள‌ர்ந்து விட்டோம் என்று எவ்வ‌ள‌வோ சொன்னார்க‌ள்… அட‌ எங்க‌ள் நாட்டில் [பிர‌ச்சினை பெரிதாவ‌த‌ற்கு முன்] கூட‌ இப்ப‌டிக் க‌ண்ட‌தில்லையே. க‌வ‌னிப்பார‌ற்ற‌ க‌ட்டிட‌ங்க‌ளும், குப்பையைக் கிள‌ரும் ஏழைக‌ளும் இப்போது இங்கு இருக்கிறார்க‌ளாயின், எங்க‌ள் நாடு பிர‌ச்சினைக்கு முன் இப்போதைய‌ த‌மிழ் நாட்டை விட‌ ந‌ன்றாக‌ இருந்திருக்கிற‌தே. இப்போதைய‌ த‌மிழீழ‌ம் போல் இருக்கிற‌தே த‌மிழ் நாடு என்று யோசிச்சேன். பிற‌கு, அட‌ இங்கு ஏழைக‌ளும், ப‌ண‌க்கார‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள். அங்கு இப்போதைக்கு ஏழைக‌ள் ம‌ட்டும் தான் இருக்கிறார்க‌ள். க‌ன‌டாவில் கூட‌ குப்பையைக் கிள‌றுப‌வ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள். ஆனால், த‌மிழ் நாட்டில் பார்க்கும்போது ஏதோ ம‌ன‌து க‌டின‌மாக‌ இருந்த‌து.

நாங்க‌ள் வ‌ந்த‌ பெருஞ்சாலையில் [highway] இடையில் குறுக்காக‌ ஏதோ ஒரு தானிய‌ விதை வ‌கை செடிக‌ளை ப‌ர‌ப்பி விட்டிருக்கிறார்க‌ள். போகும் வாக‌ன‌ங்க‌ள் எல்லாம் அத‌ன் மேல் ஏறி மிதித்துக்கொண்டு தான் போக‌வேண்டும். அட‌ அது என்ன‌ண்டாவாம், இப்ப‌டி ந‌டு ரோட்டில் போட்டுத் தான் அதை உடைப்பார்க‌ளாம். கிட்ட‌த்த‌ட்ட‌ த‌விடு த‌ட்டுவ‌து போல். இப்ப‌டியும் ச‌ன‌ம் ஏழ்மையான‌ வாழ்க்கையில் த‌ங்க‌ள் தொழிலை செய்து வ‌ருகிறார்க‌ள்.

இப்ப‌டியே வீடு வ‌ந்து சேர்ந்தோம். க‌டைக‌ள், விருந்தின‌ர் வீடு என்று எல்லாம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ போய் வ‌ந்தோம்.

நான் பார்த்த‌தில். த‌மிழ் நாடு வ‌ற‌ண்ட‌ பிர‌தேச‌மாக‌வே தென்ப‌டுகிற‌து. ஆறுக‌ள் எல்லாம் வ‌ற‌ண்டு, ம‌ண‌லாக‌வும் க‌ல்லாக‌வும் தெரிகிற‌து. அந்த‌ இட‌த்தில் குடிசை போட்டுக் கூட‌ ஆட்க‌ள் வாழ்கிறார்க‌ள். மிக‌ப் பெரிய‌ ஆறுக‌ளுக்கு குறுக்காக‌ க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ பால‌ங்க‌ள் எல்லாம் waste ஓ என்று எண்ணும‌ள‌விற்கு அங்கு த‌ண்ணீர் வ‌ந்த‌ த‌டைய‌த்தையே காண‌வில்லை. ம‌ற்ற‌ இட‌ங்க‌ளில் கூட‌ ம‌ர‌ங்க‌ள் சோலையாக‌ ப‌ச்சைப் ப‌சேலென்று இல்லை. வ‌ற‌ண்ட‌ பிர‌தேச‌த்தில் வ‌ள‌ர‌க்கூடிய‌ முற்செடிக‌ள் போன்ற‌ ம‌ர‌ங்க‌ள் தான் அதிக‌மாக‌த் தென்ப‌டுகின்ற‌ன‌.

எனக்கு மிகவும் வருத்தத்தைத் தந்த விடயம். தமிழ் நாட்டில் தமிழ் சாகுது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அப்போது தான் நேரில் பார்த்தேன். எந்த வியாபார நிலையம் கூட தமிழில் பெயர் பலகையைக் கொண்டிருக்கவில்லை என்பது மிகவும் கவலையான விடயமாக இருந்தது. அப்ப என்னதில இருக்கும்? “பர்னிச்சர் ஸ்டோர்” “கிருஷ்ணன் ஹோட்டல்”, “மார்க்க‌ட்”, “கோர்ப‌ரேட் ஸ்டோர்” என்று இப்படி ஆங்கிலத்தை தமிழில் எழுதி தான் சகல பெயர்ப்பலகைகளும் இருந்தன. இதை விட இங்கு கனடாவில் தமிழ் வாழுது என்று சொல்லலாம். அட கடைக்கு மட்டுமா இப்படி. ஊர்களுக்கும் இப்படி எல்லா பெயர் வைக்கிறார்கள்: “T. த‌ர்ம‌புர‌ம்”, “I.O.B. நக‌ர்”, என்று இப்ப‌டி ப‌ல‌ ஊர்க‌ள். முத‌லில், என்ன‌டா இது ஊர்க‌ளுக்கும் initial வைத்திருக்கிறார்க‌ளோ என்று அதிர்ந்து போனேன்.

பிற‌கு திருச்சியில் இருந்து கேர‌ளா சென்று வ‌ந்தோம். திருச்சியில் இருந்து வெளிக்கிட்டு, குருவாயூர் கோயிலுக்குப் போனோம்.

திருச்சியில் இருந்து கேர‌ளா போகும் பாதை நெடிய‌ ப‌ழ‌ வ‌கைக‌ள் வைத்து வித்துக்கொண்டிருந்தார்க‌ள். என‌க்கு நாங்க‌ள் இல‌ங்கையில் க‌ண்டிக்குப் போன‌ ஞாப‌க‌ம் தான் வ‌ந்த‌து.

கேர‌ளா எல்லை வ‌ந்த‌து. அத‌ற்குப் பிற‌கு ப‌ழ‌ங்க‌ள் ஏதும் வீதியோர‌ங்க‌ளில் விற்க‌ப்ப‌ட‌வில்லை. கேர‌ள‌ காவ‌ல்துறையிட‌ன் ப‌ண‌ம் க‌ட்டி சீட்டு எடுக்க‌ வேண்டும், அவ‌ர்க‌ள் மாநில‌த்திற்கு வாக‌ன‌ம் செல்வ‌தால். அது ப‌ர‌வாயில்லை. ஆனால், அந்த‌ காவ‌ல்துறைக்கு ரூ. 50 ல‌ஞ்ச‌மாக‌வும் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. ச‌ட்ட‌த்தைச் செய்வ‌த‌ற்கும் ல‌ஞ்ச‌மா என்ற‌ க‌ம‌ல் ஹாச‌னின் “இந்திய‌ன்” ப‌ட‌ கேள்வி ஞாப‌க‌த்திற்கு வ‌ந்த‌து. கோபிக்காதீங்க, பிற‌கு திரும்பி த‌மிழ் நாட்டுக்க‌ வ‌ரேக்க‌ த‌மிழ் நாடு காவ‌ல்துறை ச‌ளைத்த‌வ‌ர்க‌ள் அல்ல‌ என்று அவ‌ர்க‌ளும் ப‌ண‌ம் வாங்கினார்க‌ள்.

இப்ப‌டியே குருவாயூர் கோயிலுக்குப் போனோம். அன்று தான் கேர‌ளாவில் “ஓண‌ம்” ப‌ண்டிகை. அப்போது தான் எங்க‌ளுக்குத் தெரிந்த‌து. ச‌ன‌க் கூட்ட‌ம் நிற‌ம்பி வ‌ளிந்த‌து. சாமி த‌ரிச‌ன‌த்திற்கு மிக‌ நீண்ட‌ வ‌ரிசை காத்திருந்த‌து. நாங்க‌ளும் காத்திருந்து உள்ளே போனால், அங்கு ஏதோ ஆடு மாட்டைக் க‌லைப்ப‌து போல் துர‌த்துகிறார்க‌ள் உள் வேலை செய்யும் ஆட்க‌ள். வேக‌மாக‌ச் செல் என்று பில‌த்துக் க‌த்தி கூச்ச‌லிடுகிறார்க‌ள் [ம‌லையாள‌த்தில்]. போதாதுக்கு, க‌ம்பிக‌ளிலும், த‌க‌ர‌ங்க‌ளிலும் அடித்து ஒலி எழுப்புகிறார்க‌ள். நாங்க‌ளும், ஆட்டு ம‌ந்தைக‌ள் போல் ஒரு க‌ம்பிக‌ளால் வ‌குக்க‌ப்ப‌ட்ட‌ பாதையில் மிக‌ வேக‌மாக [கும்பிட‌க் கூட‌ நேர‌ம் கிடைக்காம‌ல்] க‌ட‌வுளைக் க‌ண்டால் போதும் என்று போனோம். என‌க்கு கோயில் வெறுத்துப் போன‌து. என‌க்கு வேறு கோயில்க‌ளிலும் இப்ப‌டிப்ப‌ட்ட‌ அனுப‌ம் கிடைத்த‌து. ஆனால், பிற‌கு சிந்தித்துப் பார்க்கையில், அவ்வ‌ள‌வு ச‌ன‌ம் வ‌ந்தால் அவ‌ர்க‌ளும் என்ன‌ செய்வ‌து. அத‌னால‌, இந்தியாவில் எந்த‌க் கோயிலுக்கும் எந்த‌ ஒரு விசேட‌ தின‌ங்க‌ளிலும் செல்லாதீர்க‌ள். நிதான‌மாக‌ சாமி கும்பிட‌ வேண்டுமா?, எந்த‌ ஒரு விசேட நாளாக‌ இல்லாத‌‌ நாளாக‌ப் பார்த்துப் போங்க‌ள்!

ஆனால், ஒன்றை நினைத்து ஆச்ச‌ரிய‌ப்ப‌ட்டேன். மேல் ம‌ருவ‌த்தூர் அம்ம‌ன் கோவிலில் மூல‌ஸ்தான‌த்திற்குள் செல்ல‌வே எங்க‌ளை அனும‌தித்தார்க‌ள். மூல‌ஸ்தான‌ விக்கிர‌க‌த்தை சுற்றி வ‌ந்தோம். த‌மிழில் பூசை வைத்தார்க‌ள். என்ன‌ தான் நான் த‌மிழ் ப‌ற்றாள‌னாக‌ இருந்தால் கூட‌ கோவிலில் எப்போதும் ச‌ம‌ஸ்கிருத‌ ம‌ந்திர‌த்தைக் கேட்டுக் கேட்டு, த‌மிழில் கேட்கும் போது ஏதோ ஒரு வித‌ அந்த‌ர‌மாக‌வே இருந்த‌து. ஒரு த‌லைமுறை இப்ப‌டி த‌மிழில் கோவிலில் பூசை செய்து பார்த்து ப‌ழ‌க்க‌ப்ப‌ட்டு விட்டால், பிற‌கு ச‌ரியாகிவிடும் என்று நினைக்கிறேன். திருச்சியில் கூட‌ மேல்வ‌ருவ‌த்தூருக்கு என்று ஒரு சிறிய‌ அம்ம‌ன் கோவில் இருக்கிற‌து. அங்கும் த‌மிழில் பூசை வைத்தார்க‌ள். திருச்சியில் இருக்கும், உச்சிப் பிள்ளையார் கோவிலிலும் அர்ச்ச‌னை செய்ப‌வ‌ர்க‌ளை, உள்ளே மூல‌ஸ்தான‌த்திற்கு அருகாமையில் அழைக்கிறார்க‌ள். நான் ம‌லேசியாவில், ப‌த்து ம‌லை முருக‌ன் கோவிலுக்கு ம‌லை ஏறி இருக்கிறேன். உச்சிப் பிள்ளையார் கோவில், ப‌த்து ம‌லை முருக‌ன் கோவிலுக்கு ஏறும் ப‌டிக‌ளை விட‌க் குறைவாக‌வே என‌க்குத் தென்ப‌ட்ட‌ன‌.

(1)  கேர‌ளாக்குள் எங்கு பார்த்தாலும் ப‌ச்சைப் ப‌சேலென்று ம‌ர‌ங்க‌ள். ஆறு குள‌ங்க‌ள் எல்லாம் நிற‌ம்பி இருந்த‌ன‌. போதாத‌த‌ற்கு, வீடுக‌ளுக்கு முன்னால் குள‌ம் குள‌மாக‌ த‌ண்ணீர் நின்ற‌து. அதில் தாம‌ரைப் பூக்க‌ள் கூட‌ இருந்த‌ன‌. தென்னை ம‌ர‌ம் இல்லாத‌ காணி இல்லை என்று சொல்லும‌ள‌விற்கு தென்னை ம‌ர‌ங்க‌ளாக‌ இருந்த‌ன‌. வ‌ழி நெடுக‌ “க‌ள்” என்று ம‌லையாள‌த்தில் [ஆனால், “க‌” த‌மிழ் க‌ மாதிரியே இருந்த‌து] எழுதி இருந்தார்க‌ள். என்ன‌ ஆச்ச‌ரிய‌ம் இள‌நீர் மிக‌ச் சில‌ இட‌ங்க‌ளிலேயே விற்க‌ப்ப‌ட்ட‌ன‌. ப‌ச்சை இள‌நீர் தான் கூடுத‌லாக‌ விற்றார்க‌ள். செவ்விள‌நீர் வெறும் குரும்பையாக‌ இருந்த‌து. என்றாலும், ஆசைக்கு வாங்கிக் குடித்தேன். என்ன‌ இருந்தாலும், இல‌ங்கையின் இள‌நீருக்கு அடிக்காது.

அப்ப‌டியே கோவ‌ள‌ம் க‌ட‌ற்க‌ரைக்குச் சென்றோம். நாங்க‌ள் ச‌ற்று க‌ட‌ல் நீரில் குழித்தோம். க‌ருங்க‌ல் ம‌ண் அதிக‌மாக‌ இருந்த‌தால், க‌ட‌ற்க‌ரை க‌றுப்பாக‌, ஒளிப்பாக‌ இருந்த‌து. ஆனால், க‌ட‌ல் குளிக்க‌ இங்கே செல்லாதீர்க‌ள். க‌ட‌ல் அலை மிக‌வும் அகோர‌மாக‌ பாய்வ‌தால், ச‌ரியாக‌ க‌ட‌ல் குளிக்க‌வே அங்குள்ள‌ life guards விட‌மாட்டார்க‌ள். உண்மையில் ஆப‌த்தான‌தாக‌க் கூட‌ இருந்த‌து.

பிற‌கு House Boat இல் ஏறினோம். ஒரு த‌ர‌க‌ர் மூல‌மாக‌வே ஏறினோம். இதில் இன்னுமொரு த‌ர‌க‌ருக்கும் எம‌து வாக‌ன‌ ஓட்டுந‌ருக்கும் த‌க‌ராறு ஏற்ப‌ட்டு விட்ட‌து. எங்க‌ள் வாக‌ன‌ சார‌தி த‌மிழில் பேசுகிறார். ம‌ற்ற‌ய‌வ‌ர், ம‌லையாள‌த்தில் பேசுகிறார். எங்க‌ள் சார‌தி, “இஞ்ச‌ வாங்க‌ சார், இஞ்ச‌ வாங்க‌ சார்” என்று கூப்பிட்டு கூப்பிட்டு பேசுகிறார். எங்க‌ள் எல்லோருக்கும் குலை ந‌டுக்க‌ம். வேற்று பிர‌தேச‌த்தில் வ‌ந்து சண்டை பிடிக்கிறார். எல்லோரும் சேர்ந்து மொத்தி [அடித்து] விட்டார்க‌ள் என்றால்? இல‌ங்கையில் இப்ப‌டி எல்லாம் செய்ய‌ முடியுமா? சிங்க‌ள‌ ஊரில் த‌மிழில் ச‌ண்டை பிடித்தால், முத‌லில் “புலி” என்று தான் உள்ளே போடுவார்க‌ள். அட‌ த‌மிழ‌ன் சிங்க‌ள‌த்தில் கூட‌ ச‌ண்டை பிடிக்க‌ முடியாதுங்க‌. ஒரு ப‌க்க‌த்தில் ப‌ய‌மாக‌ இருந்தாலும், ம‌று ப‌க்க‌த்தில் அந்த‌ சுத‌ந்திர‌ம் ச‌ந்தோச‌த்தைக் கொடுத்த‌து. [இப்ப‌டி க‌ர்நாட‌காவில் செய்ய‌லாமா என்று என‌க்குத் தெரியாது]. இது ம‌ட்டும‌ல்ல‌, த‌மிழ் நாட்டில் கூட‌ வேற்று மொழிக்கார‌ர்க‌ள் மிக‌வும் சுத‌ந்திர‌மாக‌ த‌ங்க‌ள் மொழியை ச‌ன‌ நெரிச‌லான‌ இட‌ங்க‌ளில் கூட‌ பேசுகிறார்க‌ள். எங்க‌ளுக்கு என்றால், சிங்க‌ள‌வ‌ன் எங்க‌ளைக் க‌ண்டு பிடிச்சிடுவானோ என்று ப‌ய‌ந்து ப‌ய‌ந்து தான் இருந்திருப்போம். இந்த‌ சுத‌ந்திர‌ம் மிக‌வும் விய‌ப்பாக‌, ஆனால் ஆரோக்கிய‌மாக‌ இருந்த‌து. இதைத் தான் “ச‌ன‌நாய‌க‌ம்” என்று சொல்வார்க‌ளோ?

ஆனால், அந்த‌ House Boats இருக்கும் இட‌த்திற்குப் போனால், ஏராள‌மான‌வை நிற்கின்ற‌ன‌. அங்கு போய் பார்த்து விருப்ப‌மான‌தை பேர‌ம் பேசி ஏறியிருக்க‌லாம். சில‌வ‌ற்றில் satellite எல்லாம் பூட்டி இருந்தார்க‌ள். ஆனால், house boat இல் சுத்த‌ம் இல்லை என்று குறை கூறும‌ள‌விற்கு இல்லை. மிக‌வும் ந‌வீன‌மாக‌த் தான் உள்ளுக்குள் இருந்த‌ன‌. ஏதோ ஒரு ந‌ல்ல‌ hotel இல் இருப்ப‌து போல் தான் இருந்த‌து. ஆனாலும், இர‌வு வ‌ந்த‌வுட‌ன் ஒரு ப‌ய‌ம். அட‌டே, பெண்க‌ள் எல்லாம் இருக்கிறார்க‌ள், ந‌கைக‌ளைக் கொள்ளைய‌டிக்க‌ திருட‌ன் வ‌ருவானா? (அ) க‌ப்ப‌லில் ஓட்டுப‌ரே திருடாவாரா என்று. எங்க‌ளுட‌ன் 3 பேர், க‌ப்ப‌ல் ஓட்டுந‌ர், ச‌மைய‌ல் கார‌ர், உத‌வியாள‌ர், என்று கூட‌வே இருப்பார்க‌ள். இர‌வில் க‌ப்ப‌லை ஒரு ஓர‌மாக‌ க‌ட்டுவார்க‌ள். ஆனால், அந்த‌ ஓர‌மாக‌ வாளும் ம‌க்க‌ள் அந்த‌ கும் இருட்டிலும் ந‌ட‌மாடிக் கொண்டிருப்பார்க‌ள். அவ‌ர்க‌ள் வ‌ந்து திருடி விடுவார்க‌ளா என்று கூட‌ ப‌ய‌மாக‌ இருக்கும். இப்ப‌டி house boat இல் போகிற‌வ‌ர்க‌ள் நகைக‌ளைப் போடாதீர்க‌ள். ஒரு சில‌ருட‌னோ/ த‌னியாக‌வோ செல்லாதீர்க‌ள். க‌ன‌ பேர் போனால் தான் ப‌ய‌ம் ச‌ற்று குறைவாக‌ இருக்கும். ப‌டுக்கும்போது க‌ண்ணாடி ச‌ன்ன‌லை துணி போட்டு ம‌றைத்து விட்டுத் தான் ப‌டுத்தோம். ஏனென்றால், அருகாமையில் குடியிருக்கும் ம‌க்க‌ள் எங்க‌ள் க‌ப்ப‌லுக்கு ப‌க்க‌மாக‌த் தான் ந‌ட‌ந்து திரிகிறார்க‌ள்.

ம‌லையாள‌த்திற்கும், த‌மிழிற்கும் பெரிய‌ வித்தியாச‌ம் கிடையாது. இதில் இன்னும் வேடிக்கை என்ன‌வென்றால், நாங்க‌ள் யாழ்ப்பாண‌த்தில் உப‌யோகிக்கும் சொற்க‌ளை ம‌லையாள‌த்தில் உப‌யோகிக்கிறார்க‌ள். “உண்டு” “கிடையாது” என்று சொல்லும்போது என‌க்கு ச‌ந்தோச‌மாக‌ இருந்த‌து. அட‌ இட‌ம் கூட‌ யாழ்ப்பாண‌த்தைப் போல் தான் ப‌ச்சைப் ப‌சேலென்று இருந்த‌து. அங்க‌த்தே நினைப்பைக் கூட்டிய‌து கேர‌ளா தான். (2)  போதாத‌ற்கு, வீடுக‌ள் கூட‌ யாழ்ப்பாண‌ வீடுக‌ள் மாதிரி விசால‌மாக‌ இருந்த‌ன‌. த‌மிழ் நாட்டில் கொழும்பு வீடுக‌ள் போல், முற்ற‌ம் மிக‌ச் சிறிதாக‌வே இருக்கும். ஆனால், கேர‌ளாவில் வீடுக‌ளுக்கு முற்ற‌ம் யாழ்ப்பாண‌ வீடுக‌ள் போல் மிக‌ப் பெரிதாக‌ இருந்த‌து. வீதி வாச‌லில் இருந்து வீட்டு வாச‌லுக்கு வெகு தூர‌ம் இருந்த‌து.

(3)  இதை விட‌ வேறு ஒரு வித்தியாச‌த்தையும் க‌ண்டேன். நான் த‌மிழ் நாடுக்கு வ‌ரும்போது என் எதிர்பார்ப்பு எங்கும் சினிமாவாக‌த் தான் இருக்கும் என்று இருந்த‌து. ஆனால், த‌மிழ் நாட்டில் எங்கும் அர‌சிய‌ல் poster க‌ளாக‌த் தான் இருந்த‌து. இது என‌க்குக் கிடைத்த‌ மிக‌ப் பெரிய‌ அதிர்ச்சி.  மேல்ம‌ருவ‌த்தூரில் இருந்து திருச்சி வ‌ரும் ம‌ட்டும், “திருமாவ‌ள‌வ‌ன்”, “கேப்டன் விஜ‌ய‌காந்த்” என்று கொட்டை எழுத்துக‌ளில் சுவ‌ர்க‌ளில் எழுதி இருந்தார்க‌ள். அசிங்க‌மாக‌ அல்ல‌, அச்ச‌டித்தாற் போல் இருந்த‌து. திருச்சியில் ச‌ற்று க‌ருணாநிதிக்கும், ம‌க‌ன் “தளபதி மு.க‌. ஸ்டாலின்”  இற்கும் இருந்த‌து. ஆனால், வ‌ழி நெடுக‌ இப்ப‌டி ஏதோ ஒன்று இருந்த‌து. ஆனால், கேர‌ளாவில் ம‌ருந்துக்குக் கூட‌ அர‌சிய‌ல் poster க‌ள் இருக்க‌வில்லை. ஆக‌க் கூடி ஊருக்கு ம‌த்தியில் இருக்கும் ச‌ந்தி [downtown] யில் ம‌ட்டும் சில‌ அர‌சிய‌ல் poster க‌ள் இருந்த‌ன‌. ம‌க்க‌ள் அர‌சிய‌ல் த‌ங்க‌ள் சுவ‌ர்க‌ளை அழுக்காக்க‌ இட‌ம் கொடுக்க‌வில்லை என்ப‌து தெட்ட‌த் தெளிவாக‌த் தெரிந்த‌து.

கேர‌ள‌ கோவில் குருவாயூராக‌ இருக்க‌ட்டும் வேறு ஹிந்துக் கோவிலாக‌ இருக்க‌ட்டும், அவைக்கு கோபுர‌ம் இருக்க‌வில்லை. த‌மிழ் கோவில்க‌ள் போல் கோபுர‌ம் அற்று சீன‌ கோவில்க‌ள் போல் தான் கூரைக‌ள் இருந்த‌ன‌. த‌மிழ‌ருக்கே ஆன‌ த‌னிச் சிற‌ப்போ கோபுர‌ங்க‌ள் என்ற‌ கேள்வியை இவை எழுப்பின‌?

(4) த‌மிழ் நாடு முழுவ‌தும் சில‌ தூர‌ங்க‌ளுக்கு இடையில் ஒரு கோவில் காண‌ப்ப‌டும். கால் மிதித்த‌ இட‌மெல்லாம் கோவில்‌க‌ள் என்று கூட‌ சொல்ல‌லாம். போதாத‌த‌ற்கு புதுக் கோவில்க‌ளும் க‌ட்டுகிறார்க‌ள். ஆனால், கேர‌ளாவில் கோவில்க‌ள் மிக‌ மிக‌ அரிதாக‌வே தென்ப‌ட்ட‌ன‌. கேர‌ள‌ ப‌ய‌ண‌த்தில் 2 கோவில்க‌ளும் 5 ப‌ள்ளிவாச‌ல்க‌ளும் க‌ண்டேன்.

House boat போய் முடிய‌ அதே இட‌த்தில், speed boat ஏறி ஓடினோம். அதாவ‌து ஒரு வ‌ள்ள‌த்தில் engine பூட்டி கையால் பிடித்து திருப்ப‌து. அதில் தான். என‌து மாம‌னாருக்கு மிக‌வும் ஆசையாக‌ இருந்த‌தால் ஓடினோம். அட‌ நான் ஓட்ட‌வில்லை. வ‌ள்ள‌ சொந்த‌க் கார‌ன் ஓட்டி சிறிது தூர‌ம் சென்ற‌ பின் என‌து மாம‌னார் ஓட்டினார். நாங்க‌ள் ஓடிய‌து 40 horse power engine ஆம். மாம‌னார் சொன்னார் தாங்க‌ள் ஊரில் 180 horse power இல் எல்லாம் ஓடினார்க‌ளாம் [கிட்ட‌த்த‌ட்ட‌ 15 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்]. இது பெரிதாக‌ இல்லை என்று ச‌லித்துக் கொண்டார். என‌க்கெண்டால் இந்த‌ 40 horse power ஏ வேக‌மாக‌த் [ப‌ய‌மாக‌] தான் இருந்த‌து.

கேர‌ள‌ ப‌ண்டிகையான‌ ஓண‌ம் நேர‌த்தில் நாங்க‌ள் சென்ற‌தால், ப‌ல‌ க‌டைக‌ளில் சாப்பாட்டிற்கு 2 ம‌ணித்தியால‌ங்க‌ள் வ‌ரை காக்க‌ வேண்டி இருந்த‌து. எல்லோரும் விடுமுறையில் போய் விட்டார்க‌ளாம். இறால், ந‌ண்டு கூட‌ பிடிக்க‌ ஒருவ‌ரும் போகாத‌தால், hotel க‌ளில் அது கூட‌ இல்லை. 5 நாட்க‌ளுக்கு விடுமுறையாம். கேர‌ளா போகிற‌வ‌ர்க‌ள் ஓண‌ம் ப‌ண்டிகை நேர‌த்தில் போகாதீர்க‌ள். எங்கு பார்த்தாலும் சோட‌னையாக‌வும், கோல‌ங்க‌ளாக‌வும் இருக்க‌வில்லை. ஒரு சில‌ இட‌ங்க‌ளில் பிள்ளையாரை பூக்க‌ளால் சோடித்து இருந்தார்க‌ள்.

பிற‌கு அப்ப‌டியே, குற்றாள‌ம் வ‌ந்து குளித்தோம். வ‌ரும் வ‌ளியில் ம‌துரை மீனாட்சி கோயிலுக்குப் போக‌லாம் என்று ஒரு ம‌திய‌ம் 2 ம‌ணி போல் போனோம், ஆனால் கோவில் பூட்ட‌ப்ப‌ட்டு இருந்த‌து. மீண்டும் 4 ம‌ணிக்குத் தான் துற‌ப்பார்க‌ளாம். நாங்க‌ள் நிற்காமல் வ‌ந்துவிட்டோம்.

ஆனால் ம‌துரையில் ஒன்றைக் க‌ண்டேன். ஒரு பெரிய‌ ச‌துர‌ குளிக்குள் ந‌டுவில் கோவில் இருக்கிற‌து. நான் நினைக்கிறேன் அந்த‌க் குழி முன்பு குள‌மாக‌ இருந்திருக்க‌ வேண்டும் என்று. இப்போது வ‌ற்றிவிட்ட‌தால் கீழே கிரிக்கெட் விளையாடுகிறார்க‌ள். ஆனால், அந்த‌ இட‌ம் ஏதோ ம‌ந்திர‌ப் ப‌ட‌ங்க‌ளில் வ‌ருவ‌து போல் ஒரு பிர‌மிப்பாக‌வே இருந்த‌து. நாலா ப‌க்க‌மும் மிக‌ப் பெரிய‌ அக‌ழி. சின்ன‌ அக‌ழி அல்ல‌. ஒரு உதைப‌ந்தாட்ட‌ திட‌ல் அள‌வு பெரிய‌து.  ஆழம் கூட ஒரு 7/ 8 பேர் ஆழ்ப்பம்.  ந‌டுவில் கோவில். ஆனால், ம‌துரை திருச்சியை விட‌ சுத்த‌ம் குறைந்த‌ ஏழை இட‌மாக‌வே தென்ப‌டுகிற‌து. த‌ட்டில் குடிசை போட்டுக் கூட‌ ஆட்க‌ள் வாழ்கிறார்க‌ள். வீதிக‌ள் அக‌ல‌ம் குறைந்த‌ன‌வையாக‌வே தென்ப‌ட்ட‌ன‌.

இவை விட‌, சாக்க‌டை என்று த‌மிழ்ப் ப‌ட‌ங்க‌ளில் சொல்வார்க‌ளே அத‌ற்குப் ப‌க்க‌த்திலேயே சாப்பாட்டுக் க‌டை வைத்திருப்பார்க‌ள். ச‌மைத்து ச‌மைத்து குப்பையை அப்ப‌டி கையால் எத்தி விட்டால் அது சாக்க‌டையில் விழும். ஆனால், அந்த‌ தாங்க‌முடியாத‌ நாத்த‌த்திலும் [என‌க்கு, அவ‌ர்க‌ளுக்கு அல்ல‌] மேசை போட்டு வெட்ட‌ வெளியில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்க‌ள். இப்ப‌டி ம‌ட்டும‌ல்ல‌, அந்த‌ குடிசையும் கோபுர‌மும் என்று சொல்வ‌து போல், மிக‌ ந‌ல்ல‌ மாடி க‌ட்டிட‌ சாப்பாட்டுக் க‌டை கூட‌ ஒரு நாத்த‌ம் தாங்க‌ முடியாத‌ சாக்க‌டைக் காணிக்கு அருகாமையில் இருக்கும். நானும் அப்ப‌டி ஒரு க‌டைக்குப் போய்ச் சாப்பிட்டிருக்கேன். க‌ன‌டாவின் Tim Horton’s போல் ஒரு க‌டையும் ஊத்த‌ச் சாப்பாட்டுக் க‌டையும் அருக‌ருகாமையிலேயே இருப்ப‌தையும் க‌ண்டிருக்கிறேன்.

ஆனால், ஒன்று த‌மிழ் நாடு முன்னேறுகிற‌து என்ப‌தை ம‌றுப்ப‌த‌ற்கில்லை. எங்கு பார்த்தாலும் வீதி போடுகிறார்க‌ள். பெருஞ்சாலை [highway] க‌ட்டி ந‌டுவில் பூ ம‌ர‌ம் எல்லாம் ந‌ட்டிருக்கிறார்க‌ள். க‌ன‌டாவில் கூட‌ பெருஞ்சாலைக‌ளில் பூ ம‌ர‌ம் இல்லை. புதிது புதிதாய் க‌ட்டிட‌ங்க‌ள் க‌ட்டிக்கொண்டிருக்கிறார்க‌ள். என‌து மாமி சொன்னா, தான் முன் வ‌ந்த‌த‌ற்கும் [அதாவ‌து 1 வ‌ருட‌த்திற்கு முன்] இப்ப‌வுமே ந‌ல்ல‌ வீதிக‌ள் ப‌ல‌ போட்டுவிட்டார்க‌ள் என்றார். நாங்க‌ள் த‌ங்கி இருந்த‌ வீட்டின் அருகாமையில் இருந்த‌ ம‌ண் வீதியைக் கூட‌ தார் வீதியாக‌ மாற்றுகிறார்க‌ள். ஆனால், தார் வீதி போடுவ‌த‌ற்கு செம்ம‌ண் உப‌யோகிக்கிறார்க‌ள். நான் நினைத்தேன், அட‌டே விவ‌சாய‌ ம‌ண்ணை ஏன் இத‌ற்கு உப‌யோகிக்கிறார்க‌ள் என்று.

என‌க்கு த‌மிழ் நாட்டில் மிக‌வும் பிடித்த‌து: ப‌ழ‌ர‌ச‌ம்.
க‌ன்டாவில் Fresh Fruit Juice என்று சொல்லி குளிர்பான‌ப் பெட்டியில் இருந்த‌ சாறைத் த‌ருவார்க‌ளே. அங்கே உண்மையான‌ ப‌ழ‌த்தை எங்க‌ள் க‌ண் முன் அரைத்து juice எடுத்துத் த‌ருவார்க‌ள். முந்திரிய‌ப் ப‌ழ‌ம், மாதுள‌ம் ப‌ழ‌ம், சாத்துக்குடி [Orange மாதிரி, ஆனால் இனிக்கும்], அன்னாசி, ச‌போடா, Lemon, ம‌ற்றும் சுத்த‌மான‌ பால், என்று எல்லாம் மிக‌வும் ஆசைப்ப‌ட்டுக் குடித்தேன்.

எந்த‌க் க‌டையிலும் சைவ‌ சாப்பாடு அந்த‌ மாதிரி இருக்கும். நெய் தோசை என்ன‌, பூரி என்ன, இட்ட‌லி என்ன‌‌ எல்லாம் “கிய‌ல‌ வ‌ட‌க் நானே” [சிங்க‌ள‌ம்: சொல்லி வேலை இல்லைய‌ல்லோ]. அசைவ‌ சாப்பாடு என‌க்கெண்டால் பிடிக்க‌வில்லை. ஆனால், பிற‌கு ஆட்க‌ள் சொன்னார்க‌ள் செட்டிநாட்டுக் க‌டைக‌ளில் அசைவ‌ச் சாப்பாடு ந‌ன்றாக‌ இருக்கும் என்று. மிக‌ப் பெரிய‌ hotel க‌ளில் சாப‌பாடு ந‌ன்றாக‌த் தான் இருக்கும். Chicken 65 உண்மையில் ந‌ன்றாக‌த் தான் இருந்த‌து. Chicken 65 என்றால், கோழி முட்டையில் இருந்து பொரித்து 65வ‌து நாள் அதை வெட்டி க‌றி ச‌மைத்தால் தான் அது உண்மையில் Chicken 65.

தெளிவாக‌, நான் த‌மிழ் நாடு முழுக்கப்‌ பார்க்க‌வில்லை. ஆனால், இவ்வ‌ள‌வு இட‌ங்க‌ளுக்குப் போகும் வழியில் ப‌ல‌ ஊர்க‌ளைக் க‌ட‌ந்து சென்றேன். என்னைப் பொறுத்த‌ வ‌ரையில் இந்தியா ஒரு சுற்றுலா இட‌மாக‌க் க‌ருதி போகாதீர்க‌ள். உங்க‌ள் ப‌ழைய‌ நினைவுக‌ளை அசை போட‌, “எங்க‌ள் ஊர் எப்ப‌டி” என்று மீண்டுமொருமுறை அனுப‌விக்க‌, இய‌ற்கையை ர‌சிக்க‌ செல்லுங்க‌ள்.  சறமும், shorts  உம் மறக்காமல் கொண்டு செல்லுங்கள்.

முற்றும்.

4 responses so far

Nov 22 2008


[த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 3] த‌மிழ்த் தாய் நாட்டில் என் முத‌ல் பாத‌ம்

Filed under India,Tamil Nadu

எத‌ற்கும் த‌யாராக‌ த‌மிழ் நாட்டிற்கு கிள‌ம்பிவிட்டேன்.

சென்னை விமான‌ நில‌ய‌த்தில் இறங்கிய‌து ந‌ம‌து Jet Airways. விமான‌த்திற்கு வெளியில் வ‌ந்து அந்த‌ ந‌டை ஓடையினுள் ந‌ட‌க்கும் போதே சாடையான‌ வெட்கை தொட‌த் தொட‌ங்கிய‌து. அம்மாவிற்கு wheelchair book ப‌ண்ணி இருந்த‌னாங்க‌ள். விமான‌த்தின் க‌த‌விற்கு வெளியே நின்றிருந்தார்க‌ள். wheelchair ஐப் பார்த்தாலே ப‌ய‌மாக‌ இருந்த‌து. அட‌ அம்மா அதிலிருந்து த‌வ‌றி விழுந்து விடுவாரோ என்று தான். கை வைப்ப‌த‌ற்கு இரு ம‌ருங்கிலும் ஒரு த‌டைக‌ளும் கிடையாது. ஒரு ப‌க்க‌ம் ச‌ரிஞ்சால், அப்ப‌டியே வ‌ழுக்கி விழ‌ வேண்டிய‌து தான்.

ஏதோ ஏறிக்கொண்டு போனோம். wheel chair இற்கு என்று த‌னியான‌ custom counter. எந்த‌ பிர‌ச்சினையும் இல்லாம‌ல், மிக‌ குறுகிய‌ நேர‌த்திலேயே bag எடுக்கும் இட‌த்திற்கு வ‌ந்து விட்டோம். ஏதோ போற‌ணைக்குள் இருப்ப‌து போல் ஒரு சாடையான‌ உண‌ர்வு. என‌து ம‌னைவிக்கு விய‌ர்க்க‌த் தொட‌ங்கி விட்ட‌து. என‌க்கு இன்ன‌மும் விய‌ர்க்க‌வில்லை. என் உட‌ம்பு வெட்கையை, குளிரை விட‌ விரும்புவது, என்ப‌தாலோ என‌க்கு விய‌ர்க்க‌வில்லை.

ஆனால், என‌க்குள் ஏதோ ஒரு விப‌ரிக்க‌ முடியாத‌ ச‌ந்தோச‌ம். என் நாட்டில் வ‌ந்து இற‌ங்கிய‌து போல் இருந்த‌து. த‌மிழில் பெய‌ர்ப்ப‌ல‌கைக‌ள் க‌ண்டேன். வேலை செய்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் த‌மிழ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள். ஆனால் எல்லோரும் இளைஞ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள். நினைத்துக் கொண்டேன், வேலை எடுக்க‌க் க‌டின‌ம் என்ப‌தால் கிடைத்த‌ வேலையை செய்கிறார்க‌ள் என்று.

விமான‌த்தில் இருக்கும் போதே எல்லோரும் க‌ழிவ‌றைக்குப் போனார்க‌ள். நான் இற‌ங்கிப் போக‌லாம் என்று இருந்தேன். அப்போது ம‌னைவி சொன்னார், விமான‌ நில‌ய‌ க‌ழிவ‌றை செல்லும்ப‌டியாக‌ இருக்காது என்று. அப்ப‌வே ஒரு ஆசை. அந்த‌க் க‌ழிவ‌றைக்கு நான் போயே தீர‌வேண்டும். ஏன்? அட‌ அப்ப‌ தானே என‌து ப‌திவில் அதைப் ப‌ற்றியும் எழுத‌லாம். இற‌ங்கி அத‌ற்குள் போனேன். அட‌டா தாங்க‌ முடிய‌லைங்க‌. அவ்வ‌ள‌வு நாற்ற‌ம். நில‌ம் முழுக்க‌ ஈர‌மாக‌ [எப்ப‌டி என்று கேட்காதீர்க‌ள்?!] இருந்த‌து. அட‌ நாட்டின் முத‌ல் தொட‌ர்பு இட‌மாக‌, வ‌ர‌வேற்பு இட‌மாக‌ உள்ள‌ விமான‌ நிலைய‌த்திலேயே இப்ப‌டி க‌வ‌னிக்காம‌ல் இருந்தால் எப்ப‌டி சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் வ‌ருவார்க‌ள் என்று யோசித்துக்கொண்டேன். ஆனால் ஒன்று ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌து. பிற‌கு க‌ன‌டா திரும்பும் போது விமான‌ நிலைய‌த்தில் க‌ழிவ‌றைக்குப் போனேன். அது கொஞ்ச‌ம் ப‌ர‌வாயில்லையாக‌ இருந்த‌து. போகும்போது ந‌ல்லா க‌வ‌னிக்கிறார்க‌ளோ?

எல்லாம் முடிந்து, விமான‌ நில‌ய‌த்திற்கு வெளியே வ‌ந்தேன். இன்னும் கூட‌ வெட்கையாக‌ இருந்த‌து. அப்போது தான் என‌க்கு இடித்த‌து. நாங்க‌ள் வெளியில் வ‌ந்த‌து அங்க‌த்தே நேர‌ப்ப‌டி அதி காலை 1:30. அட‌ அந்த‌ நேர‌த்திலேயே இப்ப‌டி வெட்கை என்றால், ம‌த்தியான‌த்தில் என்ன‌ நில‌மை என்று யோசித்தேன், ச‌ற்றுப் ப‌ய‌மாக‌ இருந்த‌து. ஆ, ஒருகை பார்த்து விடுவோமே.

வெளியில் ஒரே ச‌ன‌க்கூட்ட‌மாக‌வே இருந்த‌து. இந்த‌ ந‌டு ராத்திரியில் கூட‌ ரீ/ க‌ட‌லை என்று எல்லாம் கையில் கொண்டு விற்றுக்கொண்டிருந்தார்க‌ள். ஆட்க‌ள் சும்மா த‌ரையில் இருந்தும் ப‌டுத்தும், இருந்தார்க‌ள். க‌ன‌டாவில் என்றால், அசிங்க‌ம் என்று எண்ண‌த் தோன்றியிருக்கும். ஆனால், என‌க்கு ஏதோ ஒரு “ந‌ம்ம‌ இன‌ம்” “ந‌ம்ம‌ ச‌ன‌ம்” நம்ம மண் என்று ஆன‌ந்த‌மாக‌வே தோன்றிய‌து.

நான் இந்திய அர‌சை எவ்வ‌ள‌வு வெறுத்தேனோ, அதை விட‌ என் ஆன‌ந்த‌ம் அதிக‌ மாக‌ இருந்த‌து. பிற‌கு சின்ன‌ நெருட‌ல். அட‌டே, இப்ப‌டி என் ச‌ன‌மும் இருக்கும் நாள் எப்போது.

இந்தியாவில் இருந்த‌ என‌து ம‌னைவியின் அப்ப‌ப்பாவும், அப்ப‌ம்மாவும் வாக‌ன‌ம் பிடித்து வ‌ந்திருந்தார்க‌ள். அதில் ஏறினோம். இர‌ண்டு வேலை ஆட்க‌ள் கொண்டு bag குக‌ளை வாக‌ன‌த்தின் பின்னும், மேலும் க‌ட்டினோம். அவ்வ‌ள‌விற்கு சாமான், 6 பேர் அல்ல‌வா. என‌து தாயார், நான், ம‌னைவி, ம‌னைவியின் த‌ம்பி, த‌ந்தை, தாய் என்று எல்லோரும் க‌ன‌டாவில் இருந்து வ‌ந்து சேர்ந்தோம்.

வ‌ண்டியில் போகும்போதே இடையில் ஒரு இட‌த்தில் ச‌ல‌ம் போவ‌த‌ற்காக‌ நிற்பாட்டினார்க‌ள். இது தான் என் தமிழ் நாட்டுப் பயணத்தில் ம‌ற‌க்க‌ முடியாத‌ ச‌ம்ப‌வ‌ம். ந‌ல்ல‌ இர‌வு,  மூன்று பக்கம் துறந்த ஒரு தட்டி போட்ட க‌டை.   த‌ட்டி போட்டு அடுப்பு வைத்து சுட்டுக்கொண்டிருந்தார்க‌ள். ஈ, கொசு எல்லாம் த‌ங்க‌ள் ராய்ச்சிய‌ம். மேசை எல்லாம் clean என்ற‌ வார்த்தை அறியாத‌வைக‌ளாக‌ இருந்த‌ன‌. ஆனாலும் என‌க்குள் இங்கு உண்ண‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம். ப‌சித்த‌து என்ப‌து தான் உண்மை. ப‌ரோட்டா ரொட்டியும் சாம்பார், ப‌ருப்பு, வேறு ஏதோ ச‌ம்ப‌ல் என்று சாப்பிட்டோம். அட‌ நானும் என‌து ம‌ச்சானும் ம‌ட்டுமே உண்டோம். ஒரு ரொட்டி காணாது என்று இன்னுமொரு பரோட்டா கேட்டு வாங்கிச் சாப்பிட்டேன்.  இப்படி ஒரு பராட்டோ ரொட்டியை பிறகு நான் எங்கும் உண்ண‌வில்லை.  எல்லோருமாக Tea குடித்தோம். அதையும் சொல்ல‌ வேண்டும். Tea cup இங்கு க‌ன‌டாவில் போல் பெரிய‌ அள‌வு இல்லை. இங்க‌த்தே அள‌வின் 1/3 ப‌ங்காக‌வே இருக்கும். அவ்வ‌ள‌விற்கு மிக‌ச் சிறிய‌ அள‌வில் தான் அங்கு எந்த‌க் க‌டையிலும் Tea த‌ருவார்க‌ள்.ஆனால் என்னமோ, ருசியாகத்தான் இருக்கும்.  அட சலம் கழிக்க அல்லவா நிற்பாட்டினோம்.  அதையும் கடைக்கு அருகாமையில் ஒருஓரமாக,காற்றோட்டமாக கழித்தோம்.  அந்த நாள் ஞாபகம நெஞ்சிலே வந்ததே என்று பாடவேண்டும் போல் இருந்தது.

தமிழ் நாடு எப்படி என்று அடுத்த இடுகையில் பார்போமா.

4 responses so far

பழைய இடுகைகள் »

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.