இவற்றிற்கான களஞ்சியம் 'Government of Tamil Eelam' வகை

May 20 2010


CAPitalZ

The power struggle of உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பு

த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் இந்த‌ மாத‌ம், இந்த‌ நாட்க‌ள் ஒரு மிக‌வும் துன்ப‌க‌ர‌மான‌ கால‌ம்; வ‌லி சும‌ந்த‌ மாத‌ம். 40,000 இற்கும் மேற்ப‌ட்டோர் கொல்ல‌ப்ப‌ட்டிருக்க‌லாம் என‌ முன்னாள் ஐநா ச‌பாநாய‌க‌ர் கூறியிருந்தார். எம் த‌மிழீழ‌த் தேச‌த்தின் த‌லைவ‌ரையும் இழ‌ந்த‌[?] மாத‌ம்.

இந்த‌ ஒரு வ‌ருட‌ கால‌ம் க‌ட‌ந்த‌ பின்னும், எம் ம‌திற்புக்குரிய‌ த‌லைவ‌ரை துற‌ந்த‌ பின்னும், நாம் ஏன் இன்னும் த‌மிழீழ‌க் க‌ன‌வோடு சித‌றிக்கிட‌க்கின்றோம்? த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார்? இற‌க்க‌வில்லை? எதை ந‌ம்புவ‌து? எது பொய்? என்று யோசித்து யோசித்தே எதையும் செய்யாம‌ல் கிட‌ந்துவிட்டோம். Shakespeare இன் Hamlet போல் யோசித்து யோசித்தே த‌க்க‌ த‌ருண‌த்தை இழ‌ந்துவிட்டோம்.

ப‌த்ம‌நாத‌ன், த‌லைவ‌ரால் வெளிநாட்டு தொட‌ர்பாள‌ராக‌ மே 2009 இற்கு ப‌ல‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பே தெரிவிக்க‌ப்ப‌ட்டிருந்தார்

ப‌ல‌ருக்குத் தெரியுமோ தெரிய‌வில்லை, த‌லைவ‌ரால் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர் தான் திரு. ப‌த்ம‌நாத‌ன் அவ‌ர்க‌ள். புலிக‌ளின் வெளிநாட்டு தொட‌ர்பாள‌ராக‌ ச‌‌ன‌வ‌ரி 3, 2009 அன்றே செய்தி வெளியாகிவிட்ட‌து. அவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட‌தை அர‌சிய‌ல் பொறுப்பாள‌ர் ப‌.ந‌டேச‌ன் அவ‌ர்க‌ளும் ஊர்சித‌ப்ப‌டுத்தியிருந்தார். த‌மிழீழ‌ப் ப‌டை மிக‌வும் குறுகிய‌ இட‌த்திற்குள் முற்றுகையிட‌ப்ப‌ட்ட‌தால், வெளிநாட்டுத் தொட‌ர்புக‌ளை இல‌குவாக‌/அடிக்க‌டி மேற்கொள்ள‌ க‌டின‌ம் என்ற‌ அடிப்ப‌டையிலேயே திரு. ப‌த்ம‌நாத‌ன் அவ‌ர்க‌ளை த‌லைவ‌ர் நிய‌மித்தார்.

சில‌ர் ஏற்க‌ன‌வே தேட‌ப்ப‌டுப‌வ‌ரான‌ ப‌த்ம‌நாத‌னை நிய‌மித்த‌து பிழை என்று சொல்கிறார்க‌ள். புலிக‌ள் இய‌க்க‌த்தின் பிர‌திநிதியாக‌, த‌லைவ‌ருட‌ன் தொட‌ர்பு வைத்துக்கொள்ள‌க்கூடிய‌ ஒரு ந‌ப‌ரைத் தான் நிய‌மிக்க‌லாமேயொழிய‌ அமெரிக்க‌விலோ (அ) பிரித்தானியாவிலோ ஒருவ‌ரை நிய‌மித்து, பின் அவ‌ர் த‌லைவ‌ருட‌னான‌ தொட‌ர்பை ஏற்ப‌டுத்தும்போது அவ‌ரை கைது செய்து (அ) ஒட்டுக்கேட்டால் அப்ப‌டி நிய‌மித்த‌த‌ன் ப‌ய‌னே அற்றுப்போய்விடும்.

நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌திலிருந்து ப‌த்ம‌நாத‌ன் ப‌ல‌ ப‌த்திரிகை அறிக்கைக‌ளை விட்டிருந்தார். TamilNet இன் 2009 இற்கான‌ News ப‌குதியைப் பார்த்தால் தெரியும். சாதார‌ண‌மாக‌ வெளிநாடுக‌ளில் வாழும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ப‌த்ம‌நாத‌ன் ச‌ன‌வ‌ரி மாத‌மே த‌லைவ‌ரால் வெளிநாட்டுத் தொட‌ர்பாள‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டார் என்ப‌து தெரியாம‌லிருக்க‌லாம். ஆனால் வெளிநாடுக‌ளில் இய‌ங்கும் “உல‌க‌த் த‌மிழ‌ர்” அமைப்புக‌ளுக்கு இது தெரிய‌வில்லை என்று சொன்னால் அது ப‌ச்ச‌ப் பொய்.

ஆனால், ப‌த்ம‌நாத‌னை வெளிநாட்டுத் தொட‌ர்பாள‌ராக‌ நிய‌மித்த‌து உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பிற்கு பெரும் பின்ன‌டைவாக‌ இருந்த‌து. தாங்க‌ளே “வெளிநாட்டு உல‌க‌த் த‌மிழ‌ரின்” பிர‌திநிதி என்று வெளிநாடுக‌ளில் மார்த‌ட்டிக்கொண்டிருந்த‌வ‌ர்க‌ளுக்கு, த‌ங்க‌ளைத் த‌விர்த்து வேறு ஒருவ‌ரை வெளிநாட்டு தொட‌ர்பாள‌ராக‌ த‌லைவ‌ர் நிய‌மித்த‌து பொறுக்க‌முடியாம‌ல் இருந்த‌து. இருந்தாலும், அந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் ஒன்றும் செய்ய‌முடியாம‌லும் இருந்த‌து.

இப்ப‌டியுமா என்று யோசிப்ப‌வ‌ர்க‌ளுக்கு சில‌ க‌ட‌ந்த‌ கால‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள். சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு த‌லைவ‌ரால் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌ ஒருவ‌ர் த‌மிழீழ‌த்திலிருந்து க‌ன‌டா வ‌ந்திருந்தார். அவ‌ர் உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பின் நிர்வாக‌த்தை/ நிதி க‌ண‌க்குக‌ளை அல‌சினார். இத‌னால் அவ‌ருக்கும், க‌ன‌டாவில் உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பின் த‌லைமைப்பீட‌த்திற்கும் முறுக‌ல் நிலை ஏற்ப‌ட்ட‌து. இவ்வ‌ள‌வு நாளும் பாதுகாப்பாக‌ இருந்த‌ ந‌ப‌ர், RCMP இன‌ரால் பிடிக்க‌ப்ப‌ட்டு உட‌ன‌டியாக‌ நாடு க‌ட‌த்த‌ப்ப‌ட்டார்.

ரொறொன்டோ மாந‌க‌ரை ப‌ல‌ பிரிவுக‌ளாக‌ பிரித்து உல‌க‌த் த‌மிழ‌ர் பொறுப்பாள‌ர்க‌ளுக்கு வ‌ள‌ங்க‌ப்ப‌ட்டிருந்த‌து. அதில் ஒரு மேற்கு ப‌குதி பொறுப்பாள‌ர் ப‌த‌வி ஏற்று தாய‌க‌ம் சென்று த‌லைவ‌ரை எல்லாம் ச‌ந்தித்து வ‌ந்த‌வ‌ர். அவ‌ர் பொறுப்புக்க‌ளை ஏற்று ந‌ட‌த்திவ‌ருகையில், சில‌ கால‌ங்க‌ளுக்குப் பின் டொறொன்டோ உல‌க‌த் த‌மிழ‌ர் த‌லைமைப்பீட‌த்துட‌ன் முறுக‌ல் ஏற்ப‌ட்ட‌து. அப்ப‌டி முர‌ண்பாடு ஏற்ப‌ட்டு மூன்றாம் நாள், RCMP இன‌ரால் விசாரிக்க‌ப்ப‌ட்டார்.

ரொறொன்டோ ந‌க‌ரில் மாண‌வ‌ர்க‌ளால் ஆர்ப்பாட்ட‌ம் அமெரிக்க‌ தூத‌ர‌க‌த்திற்கு முன்னாள் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கையில், உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பு த‌னியாக‌ Queens Park இல் ஆர்ப்பாட்ட‌த்தை ந‌ட‌த்தினார்க‌ள். போதாத‌த‌ற்கு ஒருவ‌ரை “சாகும்வ‌ரை உண்ணாவிர‌த‌ம்” என்று கொண்டுவ‌ந்து இருத்தினார்க‌ள். பிற‌கு பார்த்தால் அவ‌ர் இல‌ங்கை அர‌சாங்க‌த்தின் ப‌க்க‌ம் சார்ந்த‌வ‌ராம்.

த‌ங்க‌ளின் அதிகார‌த்தை எத‌ற்காக‌வும் விட்டுக்கொடுக்க‌த் த‌யாராக‌ இல்லை. த‌ங்க‌ளின் த‌லைமைப்பீட‌த்திற்கு குந்த‌க‌ம் விளைவிக்கும் ந‌ப‌ர்க‌ளைத் தாங்க‌ளே காட்டிக்கொடுக்கும் எழிய‌ க‌லாச்சார‌ம் நில‌வுகிற‌து.

உல‌க‌த் த‌மிழ் அமைப்பு த‌லைவ‌ரின் க‌ட்ட‌ளையை மீறிய‌தா?

இந்த‌ நேர‌த்தில், ப‌த்ம‌நாத‌ன் வெளிநாடுக‌ளில் உள்ள‌ உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்புக‌ளுட‌ன் ஒரு கூட்ட‌ம் வைத்தார். அதில், த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார் என்ற‌ செய்தியை உல‌க‌த் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு அறிவியுங்க‌ள் என்று சொன்னார். ஆனால், இந்த‌ உல‌க‌த் த‌மிழ் அமைப்பு அதை செய்ய‌ ம‌றுத்துவிட்ட‌து. அப்ப‌டிச் சொன்னால் ஒருவ‌ரும் அத‌ற்குப் பின் காசு த‌ர‌மாட்டார்க‌ள் என்ற‌ கார‌ண‌த்தை முன்வைத்த‌து.

இப்ப‌டி இவ‌ர்க‌ள் பொதும‌க்க‌ளுக்கு அறிவிக்க‌ ம‌றுத்த‌ க‌ட்டாய‌த்தாலேயே ப‌த்ம‌நாத‌ன் தானாக‌ அறித்தார். அவ‌ர் நேர‌டியாக‌ ஊட‌க‌ங்க‌ளுக்கு த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார் என்ற‌ செய்தியை அறிவித்தார். இதைப் பொறுக்க‌ முடியாத‌ வெளிநாட்டு உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பின் த‌லைமைப்பீட‌ம், ப‌த்ம‌நாத‌னின் இருப்பிட‌த்தைக் காட்டிக்கொடுத்துவிட்ட‌து. அவ‌ர் வெளியில் வ‌ந்து ப‌ல‌ருட‌னும் தொட‌ர்பு கொள்ள‌வேண்டிய‌ நிலை, இந்த‌ உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பினாலேயே ஏற்ப‌ட்ட‌து.

த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார். அவ‌ரின் இட‌த்தை இவ‌ர் பிடிக்க‌ தானே அறிக்கைக‌ளை விடுகிறார். இவ‌ர் த‌ம்ப‌ட்ட‌ம் அடிக்கிறார். இவ‌ர் துரோகி என்று ஒரு த‌ர‌ப்பு. த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார் என்று அவ‌ர் எப்ப‌டி அறிவிக்க‌லாம்? த‌லைவ‌ர் சாக‌மாட்டார். இவ‌ர் சூழ்ச்சி செய்ய‌ப் பார்க்கிறார். அவ‌ரை யாராலும் கொல்ல‌ முடியாது என்று இன்னுமொரு த‌ர‌ப்பு. ச‌ரி இர‌ண்டு வித‌மாகவும்‌ நிலையை ஆராய்ந்து பார்ப்போம்.

த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார்

உண்மையில் த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார் என்றால், அதை உல‌க‌த் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு அறிவிக்க‌வேண்டிய‌ க‌ட்டாய‌ம் உண்ட‌ல்ல‌வா? த‌மிழீழ‌த்திற்காய் எவ்வ‌ள‌வோ செய்த‌ எம் தேசிய‌த் த‌லைவ‌ருக்கு ஒரு அஞ்ச‌லி கூட‌ வைக்காவிட்டால் நாமெல்லாம் இருந்து என்ன‌ ப‌ய‌ன்? ப‌ல‌ போராளிக‌ளுக்கு நினைவஞ்ச‌லி செய்கிறோம், தியாகிக‌ளுக்கு நினைவ‌ஞ்ச‌லி செய்கிறோம் ஆனால் எம் த‌லைவ‌ர் இத‌ற்குக் கூட‌ பாக்கிய‌ம‌ற்ற‌வ‌ராக‌ அல்ல‌வா போய்விட்டார்? அவ‌ர் த‌ன் வாழ்க்கையையே த‌மிழீழ‌த்திற்காய் தியாக‌ம் செய்து இறுதியில் ஒரு அஞ்ச‌லி கூட‌ கிடைக்காம‌ல் போய்விட்டார்.

அதை விட‌, த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார் என்ற‌ உண்மையை அறிவித்திருந்தால், உல‌க‌த் த‌மிழ‌ர்க‌ள் பொங்கி எழுந்திருப்பார்க‌ள். போராட்ட‌ங்க‌ள் தீப்பிள‌ம்பாய் வெடித்திருக்கும். த‌மிழ‌க‌த்தில் எம் ச‌கோத‌ர‌ர்க‌ள் அட‌ங்கிப் போன‌த‌ற்கு இந்த‌க் குழ‌ப்ப‌மும் ஒரு கார‌ண‌ம். வைகோ சொல்கிறார் ப‌த்ம‌நாத‌ன் துரோகி என்று. நெடுமாற‌ன் சொல்கிறார், த‌லைவ‌ர் இற‌க்க‌வில்லை, ச‌த்திய‌மாக‌ உயிரோடு தான் இருக்கிறார் என்று. வைகோ சொல்கிறார் நான் தொலைபேசியில் க‌தைத்தேன் என்று. என‌க்கு ச‌ர‌த் பொன்சேகா த‌மிழ்நாட்டு அர‌சிய‌ல்வாதிக‌ள் “கோமாளிக‌ள்” என்று சொன்ன‌து தான் ஞாப‌க‌ம் வ‌ந்த‌து. வெளிநாட்டு உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்புக்க‌ள் த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார் என்று உத்தியோக‌பூர்வ‌மாக‌ அறிவிக்க‌வில்லை. ப‌த்ம‌நாத‌ன் த‌னியொருவ‌ர் தான் அப்ப‌டி சொல்கிறார். ஆக‌வே த‌லைவ‌ர் உண்மையில் இற‌க்க‌வில்லை என்றும் யோசித்தார்க‌ள். இப்ப‌டிப்ப‌ட்ட‌ கூற்றுக்க‌ளால் தான் த‌மிழ்நாடு குழ‌ம்பிப் போய்விட்ட‌து. த‌மிழ்நாடு, ம‌ட்டும‌ல்ல‌ உல‌க‌த் த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ரும் வெறும் புஸ்வான‌மாய்ப் போய்விட்டோம். இற‌ந்த‌தாக‌ எல்லோரும் அறிவித்திருந்தால் உல‌கில் ப‌ல‌ பாக‌ங்க‌ளில் வ‌ற்புறுத்தி/போர‌ட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்தி யாவ‌து ஏதாவ‌து ந‌ட‌ந்திருக்க‌லாம். இப்ப‌டி ஏதாவ‌து போராட்ட‌ம் வெடித்தாவ‌து ஒரு பாதையில் முன்ன‌க‌ர்ந்திருப்போம். நாம் அந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை இப்போது இழ‌ந்துவிட்டோம். இனிமேல் என்னால் த‌லைவ‌ரை எண்ணி அழ‌க்கூட‌ முடியாது. த‌லைவ‌ர் உண்மையில் இற‌ந்திருந்தால், உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பு எவ்வ‌ள‌வு சுய‌ந‌ல‌மிக்க‌து என்று எண்ணிக் க‌வ‌லைப்ப‌டுவார்.

த‌லைவ‌ர் இற‌க்க‌வில்லை

த‌லைவ‌ர் இற‌க்க‌வில்லை என்றால், ப‌த்ம‌நாத‌ன் அறிவித்த‌து த‌லைவ‌ரின் க‌ட்ட‌ளையைத் தானே? த‌லைவ‌ர் உயிருட‌ன் இருந்துகொண்டு தான் இற‌ந்த‌தாக‌ அறிவி, அப்போது தான் வெளிநாட்டு அர‌சாங்க‌ங்க‌ள் புலிக‌ள் ஒழிந்துவிட்டார்க‌ள், இனிமேலாவ‌து இல‌ங்கை அர‌சை நிறுத்தி த‌மிழ‌ர்க‌ளுக்கு ஏதாவ‌து உரிமை கொடுக்க‌ட்டும் என்று யோசித்துச் சொல்லியிருப்பார். இதில் வேடிக்கை என்ன‌வென்றால், சில‌ர் த‌லைவ‌ர் சொன்னால் தான் ந‌ம்புவோம் என்று சொல்கிறார்க‌ள். இது எவ்வ‌ள‌வு முட்டாள்த‌ன‌மாக‌ இருக்கிற‌து என்று நான் விள‌க்க‌வேண்டிய‌தில்லை.

த‌லைவ‌ர் இட்ட‌ க‌ட்ட‌ளையை ப‌த்ம‌நாத‌ன் செய‌ற்ப‌டுத்த‌, உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்புக்க‌ள், ம‌றுத்துவிட்ட‌ன‌. த‌ங்க‌ளின் அதிகார‌த்தை இழ‌க்கிறோம் என்ற‌ ப‌ய‌த்தில் த‌லைவ‌ரின் க‌ட்ட‌ளையையே மீறிவிட்டார்க‌ள். போதாத‌த‌ற்கு ப‌த்ம‌நாத‌னைக் காட்டிக்கொடுத்து தேச‌த் துரோக‌த்தையும் செய்துவிட்டார்க‌ள். த‌லைவ‌ர் உயிருட‌ன் இப்போது இருக்கிறார் என்றால், தான் போட்ட‌ திட்ட‌த்தை உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பு நொறுக்கிவிட்ட‌து என்ற‌ வேத‌னையில் இருப்பார்.

ச‌ன‌நாய‌க‌ வாக்கெடுப்பு

இப்போது நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சாங்க‌த்துட‌னும் ஒரு முறுக‌ல் நிலையிலேயே உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்புக்க‌ள் இருக்கின்ற‌து‌. அதிகார‌ம் முளுவ‌தும் உருத்திர‌குமார் ம‌ற்றும் சில‌ர் [வெள்ளைக்கார‌ர்க‌ள் உட்ப‌ட‌] கைக‌ளில் தான் இருக்கிற‌து என்ற‌ ஆத‌ங்க‌த்தில் இருக்கிறார்க‌ள். த‌ங்க‌ள‌து பிர‌திநிதிக‌ளை அதிக‌ப்பெரும்பான்மையாக‌ நுளைக்க‌ வேண்டும் என்ற‌ நோக்க‌த்தில், க‌ட‌ந்த‌ நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சின் ச‌ன‌நாய‌க‌த் தேர்த‌லில் உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பைத் த‌விர்ந்த‌வ‌ர்க‌ளுக்கு வாக்குப் போடாதீர்க‌ள் என்று வாக்குச் சாவ‌டி வாச‌லில் வைத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்க‌ள். இது ஒரு மிக‌வும் அநாக‌ரீக‌மான‌ செய‌ல். இவ‌ருக்கு வாக்க‌ளியுங்க‌ள் என்று சொல்ல‌லாம். ஆனால், இவ‌ருக்கு வாக்க‌ளியாதீர்க‌ள் என்று வாக்க‌ளிக்க‌ வ‌ரும் ஒவ்வொருவ‌ருக்கும் சொல்வ‌து அவ‌ர்க‌ள‌து ஈன‌ப்புத்தியையே காட்டுகிற‌து. அத‌னாலேயோ என்ன‌மோ, க‌ன‌டா உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பு தாங்க‌ளும் ஒரு வாக்கெடுப்பு ந‌ட‌த்தி க‌ன‌டாவிற்குள் ம‌ட்டும் ஒரு த‌னி “ச‌ன‌நாய‌க‌” அமைப்பை உருவாக்கும் முய‌ற்சியில் இருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளின் வாக்கெடுப்பு சில‌ தின‌ங்க‌ளில் ந‌டைபெற‌ப்போகிற‌து.

நான் உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பின் த‌லைமைப்பீட‌த்தில் தான் நிர்வாக‌க் குறைகேடுக‌ள் இருக்கிற‌து என்று சொல்கிறேனே த‌விர‌ ஒட்டுமொத்த‌ உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பு போராளிக‌ளையும் அல்ல‌. அனேக‌மான‌வ‌ர்க‌ள் ச‌த்திய‌மான‌ த‌மிழீழ‌க் க‌ன‌வோடு நாட்டுக்காக‌வும், த‌லைவ‌ருக்காக‌வும் உழைப்ப‌வ‌ர்க‌ள். த‌லைமைப்பீட‌த்தின் குறைக‌ள் அனேக‌மான‌ உல‌க‌த் த‌மிழ் அமைப்பு போராளிக‌ளுக்குத் தெரியும். அவ‌ர்க‌ளும் அந்த‌ நிர்ப்ப‌ந்த‌த்தை உண‌ர்ந்த‌வ‌ர்க‌ள் தான். இருந்தாலும் நாட்டுக்காய், த‌லைவ‌ர் ஒருவ‌ருக்காய் எல்லாத்தையும் பொறுத்துக்கொண்ட‌வ‌ர்க‌ள்.  த‌ங்க‌ள் பொன்னான‌ நேர‌த்தையும், பாதுகாப்பையும் பொருட்ப‌டுத்தாத‌வ‌ர்க‌ள். ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ள் குறை கூறுவார்க‌ள், உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பில் இருந்தால் ச‌ம்ப‌ள‌ம் கிடைக்கும். நாங்க‌ள் கொடுக்கும் காசுக‌ள் எல்லாம் அவ‌ர்க‌ள் ச‌ம்ப‌ள‌ம் என்று எடுத்துக்கொள்கிறார்க‌ள் என்று. நான் கேட்கிறேன் எத்த‌னை பேர் வீடு வீடாக‌ச் சென்று பேப்ப‌ர் போட‌வோ, ம‌க்க‌ளின் சின‌ங்க‌ல்க‌ளுக்கும், பேச்சுக்க‌ளுக்கும் ம‌த்தியிலும் காசு சேர்க்கத்‌ த‌யாராக‌ உள்ளீர்க‌ள்? எத்த‌னை வீடுக‌ளில் முக‌த்தில் அடித்தாற்போல் பேசுவார்க‌ள். நாயைவிட‌க் கேவ‌லாம‌க‌க் கூட‌ துர‌த்துவார்க‌ள். இவ‌ற்றை எல்லாம் ச‌மாளித்துவிட‌லாம் கூட‌. ஆனால், நீங்க‌ள் புலிக‌ளுக்கு காசு சேர்க்கிறீர்க‌ள் என்று RCMP (அ) காவ‌ல்துறை கைதுசெய்யும் மிக‌ப் பெரிய‌ பாதுகாப்பு ஆப‌த்து இருக்கிற‌து. த‌ங்க‌ள் மனைவி, பிள்ளைக‌ளையும் தாண்டி இப்ப‌டி ஒரு ஆப‌த்தை ஏற்க‌ உங்க‌ளில் எத்த‌னை பேர் த‌யாராக‌ உள்ளீர்க‌ள்? சும்மா ச‌ம்ப‌ள‌ம் எடுக்கிறார்க‌ள் என்று குறை கூறுவ‌தைத் த‌விர‌ உங்க‌ளால் ஆக்க‌பூர்வ‌மாக‌ எதைச் செய்ய‌ இய‌லும்?

ப‌த்ம‌நாத‌ன் இல‌ங்கை அர‌சில் பிடிப‌ட்ட‌து உண்மையில் யாருக்கு இழ‌ப்பு? அவ‌ரின் அதிகார‌த்தை புலிக‌ள் அமைப்பிலிருந்து நீக்கிய‌து உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பிற்கு ந‌ன்மையாக‌ இருக்க‌லாம். ஆனால், ப‌த்ம‌நாத‌னின் ப‌ல‌ வ‌ருட‌ உழைப்பு இப்போது போய்விட்ட‌து. அவ‌ர் பிடிப‌ட்ட‌தால், அவ‌ருட‌ன் தொட‌ர்பு வைத்திருக்கும் ப‌ல‌ புலி பெரும்புள்ளிக‌ள் எல்லாம் மாட்டுகிறார்க‌ள். இத‌னால் மொத்த‌ இழ‌ப்பு ந‌ம‌க்குத் தான். ந‌ம் த‌லைவ‌ருக்கும் தான்.

No responses yet

Sep 07 2007


CAPitalZ

வித்தாகிப்போன 19,539 மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப்போன மாவீரர்களின் விரிப்பு ஒன்றை தமிழீழ மாவீரர் பணிமனை விடுத்துள்ளது. 27-11-1982 ம் ஆண்டு தொடக்கம் 31-08-2007 அன்று வரைக்கு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 19,539 மாவீரர்கள் வீரச்சாவடைந்துள்ளனர் என அறிவித்துள்ளது. மாவீரர் விரிப்பு வருமாறு…
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு

No responses yet

Jun 29 2007


CAPitalZ

வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கே சனநாயகம் சிறந்தது

சனநாயகம் மட்டும் தான் நல்ல வழி என்றில்லை.

சனநாயகம் என்ன சொல்கிறது?  பெரும்பான்மை மக்களின் விருப்பிற்கு செல்வது சரி என்கிறது.  அப்படியாயின் சிறுபான்மை மக்களின் பேச்சு எடுபடுவதில்லை தானே.

உலக நாடுகள் சனநாயகம் என்று சொல்பவர்கள் உண்மையில் அதைத் தான் செய்கிறார்களா?  பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சுதந்திர வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று வந்தது.  உடனே “சனநாயக” நாடுகள் என்ன சொன்னன?  உதவிகள் அனைத்தையும் ரத்து செய்கிறோம்.  பொருளாராதாரத் தடை அந்தத் தடை இந்தத் தடை எல்லாம் போட்டன.  அப்போ உண்மையில் இவர்கள் விருப்பம் சனநாயகம் தானா?

இதே சந்தர்ப்பத்தை அமெரிக்காவில் பாருங்கள்.  புஷ் போரை ஆரம்பித்த பின் நடைபெற்ற வாக்கெடுப்பில் புஷ் இக்குத் தான் பெரும்பான்மை.  அவர் தன் போர் சரி என்று மேலும் தொடர்ந்தார்.  அப்போது இந்த “சனநாயத்தை” விரும்பும் நாடுகள் ஹமாஸ் இற்கு நடந்துகொண்டது போல் நடந்தனவா?

இதற்காக சனநாயகத்தைக் குறை கூறவில்லை.  ஆனால், உலகிலேயே சனநாயகத்தை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்திய நாடுகள் கூட தங்கள் நலனுக்காக சனநாயகத்தை ஓரந்தள்ளக் கூட தயங்குவதில்லை.  ஆனால் நாம், நம் நாடு குட்டிச்சுவராகப் போனாலும், மக்கள் செத்து மடிந்தாலும், இயற்கை வளம் அழிந்தொழிந்தாலும் நம் சனநாய விசுவாசத்தை [அடிமை விசுவாசம் என்று வாசிக்கவும்] பறைசாற்றி முட்டுக்கொடுத்து வருகிறோம்.

எங்கள் நாட்டின் கட்டுக்கோப்பான வளர்ச்சிக்கு எது அவசியமோ அந்தப் பாதையை நாம் சுயபுத்தியில் தேர்ந்தெடுக்க வேண்டும்.  யாரோ சனநாயகம் தான் சிறந்த வளி என்று சொல்கிறான் என்பதற்காக அந்தப் பாதையில் நடக்க வேண்டாம்.  நம் நாட்டிற்கு ஏற்றாற்போல் சனநாய வழியாக இருந்தால் கூட சில மாற்றங்களுடன் [அது சனநாயகத்திற்கு எதிராக இருந்தாலும்] செய்து நாட்டை கட்டுக்கோப்பாக வளரச் செய்

என்னைப் பொறுத்தவரையில் சனநாயகம் ஓரளவு வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கே பொருத்தம்.  சனநாயகத்தில் ஒரு முன்னெடுப்பை நடைமுறைப்படுத்த மிக நீண்ட காலம் எடுக்கும்.  வளர்ச்சி அடையாத, புதிதாக உருவாகிய நாடுகளுக்கு சனநாயத்தை விட அதிக கட்டுக்கோப்புடைய கட்டமைப்பே சிறந்தது.  பையப் பைய சனநாயகத்திற்கு நாட்டை திருப்பலாம்.

சீனாவைப் பாருங்கள்.  இரும்புக் கரம் கொண்டு நாட்டை கட்டுக்கோப்பாக, உள்ளாட்சியை நிலைநாட்டினார்கள். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன் அனுமதியே இல்லை.  சனநாயகம் தான் தங்கள் வழி என்று எடுக்காமல், தம் நாட்டிற்கு எது சிறந்தனவோ அதைச் செய்கிறார்கள்.  இப்போது நாடு சற்று முன்னேறி விட்டது, அடிப்படைக் கட்டுமானங்கள் திறம்பட இருக்கின்றன.  இனிமேல் சற்று இளக்கப்பாடான முறையைக் கையாளலாம் என்று தொடருகிறார்கள்.

No responses yet

Oct 20 2006


CAPitalZ

தமிழீழ தேசிய கீதம் எழுதும் கவிஞர்களுக்கு/ இசையமைப்பாளர்களுக்கு

  • தமிழீழ தேசிய கீதத்தில் மதம் சம்பந்தப்பட்ட எந்த சொல்லும் வரக் கூடாது.
    • இந்தக் காரணத்தால் தான் “வந்தே மாதரம்” பாடமாட்டோம் என்று இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள்.
  • தமிழர் என்ற ரீதியில் சொற்கள் இருக்கவேண்டுமேயொழிய‌ வேறு மத, பிராந்திய சம்பந்தப்பட்டதாக இருக்கக் கூடாது.
  • எந்த‌ ஊர்ப் பெய‌ரோ, மாகாண‌ப் பெய‌ரோ வராமல் இருப்பது நலம்.  தலைநகர் பெயரும் வராமல் இருப்பது நலம்.
    •  எதிர்காலத்தில் தலைநகர் பெயரை மாற்ற வேண்டி வந்தால் (அ) தலைநகரையே மாற்ற வேண்டி வந்தால், பிறகு தேசிய கீதத்தையும் மாற்ற வேண்டியிருக்கும்.
    •  திசைக‌ள் வ‌ர‌லாம்.
  • தேர்வு செய்யும் சொற்கள் எளிமையான சொற்க‌ளாக, பெரிய சொற்கள் அற்றதாக இருத்தல் வேண்டும்.
    • தமிழில் பண்டிதம் இல்லாதவரும் பாடக்கூடியதாக, ஈழம் விட்டு அயல்நாடுகளில் வேறு மொழி பேசும் ஈழத்தவர் சந்ததியும் பாடக்கூடியவாறு சொற்கள் இலகுவாக இருத்தல் நலம்.
  • பாடல் வீரத்தை பொங்கி எழ வைப்பதாக இருக்கக் கூடாது.
    • இது தேசிய கீதம்.  போருக்குப் போவதற்காக பாடப்படுவதாக அமையக் கூடாது.
    • தமிழர் ஒற்றுமையை மேலோங்கச் செய்வதாக இருத்தல் வேண்டும்.
    • தமிழன் அரசு வளர போற்றுவதாக அமைதல் நலம்.
  • இசையமைக்கும்போது வேகமாக பாடி முடிப்பதாக‌ இருக்கக் கூடாது.
    • அமைதியாக தொடங்கி மெதுவாக வேகங் கூட்டி முடிவதாக‌ அமைதல் நலம்.
  • பாடல் இரண்டு [2] நிமிடம் தாண்டி பாடப்படுவதாக இருக்கக் கூடாது.
    • மிகவும் குறுகியதாகவும் இருக்கக் கூடாது.

_____
CAPital

One response so far

Sep 22 2006


CAPitalZ

கனடாவின் வளர்ச்சி

இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா ஆயுத தளபாடங்களை பிரித்தானியாவிற்குத் தான் விற்றது. இதனால் தான் அமெரிக்கா அசுர வளர்ச்சி அடைந்தது, மற்றவர்கள் சண்டை பிடித்துக்கொண்டிருக்கையில். கவனிக்கவேண்டிய விடயம், பிரித்தானிய உரிமையாளர் அமெரிக்காவில் தொழில் தொடங்கி ஆயுதங்கள் செய்யப்படவில்லை.

இன்றைய கால கட்டத்தில், வெளி நாட்டு வியாபாரிகள் இந்தியாவிலோ (அ) வேறு நாடுகளில் தங்கள் தொழிலைத் தொடங்கி அவர்கள் காசு கறக்கிறார்கள். இதனால் உள்நாட்டு வியாபாரி பெரிதும் போட்டி போட முடியாமல் இருக்கிறது.

வெளிநாட்டு வியாபாரம் நம் நாட்டிற்குள் வருவதால் தொழில் வாய்ப்பு கிடைக்கிறது என்பது உண்மைதான்.

ஆனால், வெளிநாட்டவன் நம்மை வைத்து, நம் நாட்டிலேயே உழைக்கிறான் என்பதும் உணமை தான்.

கேள்வி நம் நாடு முன்னேறுகிறதா? நம் நாட்டு மக்கள் முன்னேறுகிறார்களா?

அதற்காக நம்மவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று நல்லா தானே முன்னேறி வாழ்கிறார்கள் என்று சொல்லாதீர்கள். இது நம் நாட்டின் வளர்ச்சி அல்ல. நம் நாட்டு மக்களின் முன்னேற்றம் இல்லை. இது நம் நாட்டின் மனித வளம் வெளியேற்றம். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு மனிதனின் செலவாணிப் பங்கு குறைந்து விட்டது. அதே நேரத்தில், வெளிநாட்டில் இருப்பவர் பணத்தை சொந்த நாட்டிற்கு அனுப்பினால் சொந்த நாட்டு பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது. இப்படித் தான் இலங்கைத் தமிழர்கள் [அரசில் பதிந்த வியாபாரி மூலம்] அனுப்பும் பணம் இலங்கை அரசுக்கு உதவி செய்கிறது.

ஏன் வெளிநாடுகள் திறைமைசாலிக்கு அதிக சம்பளம், சலுகை என்று கொடுத்து தம் நாட்டுக்கு எடுக்கிறார்கள்? அவரின் மேல் உள்ள மனிதாபிமான அக்கறையா? இல்லவே இல்லை. இவரால் தம் நாடு முன்னேறும் என்பதால்.

கனடாவில், குடும்பத்தை அழைத்துக்கொள்ளலாம் [sponser]. ஏன் இப்படி செய்கிறார்கள்? குடும்பமும் இங்கே வந்து விட்டால், இவர் தன் தாய் நாட்டுக்குத் திரும்பிப் போகவேண்டும் என்ற எண்ணம் மிகக் குறைவாகிவிடும். குடும்பத்திற்கு என்று இந்த நாட்டிலிருந்து வெளியேறும் கனடாப் பணம் இல்லாதொழிந்து விடும். ஆகவே கனடாப் பணம் கனடாவிற்குள்ளேயே நிற்கும்.

ஏன் சும்மா இருக்க பணம் கொடுக்கிறார்கள்? [welfare] பாவம் என்று பார்த்தா? இல்லை. பணம் இல்லையாயின் இவன் அதைத் தேடி வேறு நாட்டிற்கு போய்விடுவான். அப்படி அவன் போகாவிட்டாலும், நாட்டில் பஞ்சம் அதிகரித்து விடும். இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு தான் பிரச்சனை. இந்தக் காசை எடுப்பவன் என்ன செய்கிறான்? அவ்வளவத்தையும் இந்த நாட்டுக்குள்ளேயே செலவழிக்கிறான். ஆகவே, தன்னை அறியாமலேயே அவன் இந்த நாட்டு பொருளாதாரத்தை உருட்டிக்கொண்டிருக்கிறான். பொருளாதாரம் தாழ்ந்துவிடக்கூடாது என்று தான் அரசாங்கமும் சும்மா இருக்கப் பணம் கொடுக்கிறது.

பல்கலைக்கழகத்தில் படிக்க இங்கு இலவசம் அல்ல. இருந்தாலும், அரசாங்கம் வட்டி இல்லாமல் பணத்தை கடனாக உதவி செய்யும். ஏன், பாவம் படிக்கட்டும் என்றா? படித்து வருபவர்கள் பணக் கஷ்டத்தால் படிக்காமல் விட்டால் நாட்டில் அறிவாளிகள் குறைந்து விடுவார்கள். பிறகு வெளிநாட்டிலிருந்து அறிவாளிகளை வாங்க வேண்டி ஏற்படும்.

மேலே சொல்லப்பட்டவை பொதுவுடமை சிந்தனையாகத் தான் தெரிகிறது.

கனடாவை ஒரு குழந்தை என்பார்கள். ஏனெனில் மற்றய நாடுகள் போல் கனடாவிற்கு ஒரு நீண்ட வரலாறு ஏதும் இல்லை. கனடா என்று உருவாகியே சில வருடங்கள் தான் [மற்றய நாடுகளுடன் ஒப்பிடும்போது]. தன்னை வளர்த்துக்கொள்ள கனடா இப்படி சலுகைகள் கொடுக்கிறது. முன்பு சும்மா இருக்க பணம் கொடுக்கும் முறையில் [welfare] அதிக பணம் கொடுத்தார்கள். வேறு பல சலுகைகள், உதவிகள் என்று பல. இப்போது அவை குறைந்து விட்டன. ஏனெனில், கனடாவில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. பணம் இல்லை என்றில்லை. தேவை குறைகிறது. முன்பு குடும்பத்தாரை அழைக்க கட்டணமாக $500 கட்டவேண்டி இருந்தது [அதற்கு முதல் என்ன என்று எனக்குத் தெரியாது]. இப்போது $1,500 கட்ட வேண்டி உள்ளது. மூன்று மடங்காக உயர்ந்து விட்டது. தேவை குறைகிறது. வட்டி இல்லாமல் பணம் கொடுத்து அறிவாளிகளை இங்கேயே உருவாக்குகிறார்கள். அதனால், வெளிநாடுகளிலிருந்து அறிவாளியை கொண்டுவரவேண்டிய கட்டாயம் குறைகிறது.

இதை இன்னொரு விதமாகவும் எடுக்கலாம். அதாவது உள்நாட்டு மக்களை முன்னேற வழி சமைக்கிறது. வெளிநாட்டவர் படிக்க பல்கலைக்கழகங்களின் கட்டணமாக மூன்று மடங்கிற்கு மேல் கட்ட வேணும்
, உள்நாட்டவரை விட.

மொத்தமாக பார்த்தால், நாட்டின் வளர்ச்சிக்காக பல சலுகைகள் செய்து வெளிநாடுகளிலிருந்து மனித வளம் மற்றும் பொருளாதரத்தை இறக்குமதி செய்தார்கள். அதே வேளையில், நாட்டில் இருப்பவர்களையும் பாதுகாத்து அவர்களை முன்னேற்றவும் செய்கிறார்கள். எதிர்காலத்தில், நாட்டில் இருப்பவர்களை மட்டும் பார்த்தால் போதும். வெளிநாட்டு உதவி தேவை இல்லை.

வேடிக்கை என்னவென்றால், இங்கு என் நாடு கனடா என்று சொல்லி மார்தட்டி பிதட்டிக்கொள்பவர்கள் எவருமில்லை. எலும்பே உறைந்து போகுமளவிற்கு குளிர். சூறாவளி என்பதுபோல், இங்கு பனிச் சூறாவளி அனேகமாக ஒவ்வொரு பனிக்காலமும் எங்காவது வந்துவிடும். வருடத்தில் 4 மாதங்கள் தான் வெக்கை காலம். வீதியில் விழுந்த பனியை அகற்றுவதற்கே கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். இவ்வளவு இயற்கை அனர்த்தங்களுக்கும் இடையில் நாடு வளர்ச்சி அடைகிறது. கனடாவின் குளிர் பற்றி சொல்வதென்றால், அதற்கே என்று ஒரு கட்டுரை எழுதலாம். எங்கள் நாடுகளில் இப்படி எல்லாம் இல்லாமல் இருந்தும் முன்னேறவில்லை.

என்னமோ எதோ செய்து நாட்டை முன்னேற்றுவதில் வெள்ளைக்காரன் மிகக் கெட்டிக்காரன் தான் என்பதை மறுக்க இயலாது.

_____
CAPital

3 responses so far

Aug 24 2006


CAPitalZ

கனடா + கியூபெக் [ஃபிரெஞ்சு மாகாணம்]

சகலருக்கும் சமத்துவம். எதிலும் நீங்கள் போட்டியிடலாம். சாதிப் பிரச்சனை இல்லை. எவரும் படிக்கலாம். உங்கள் திறனுக்கே இங்கு முக்கியத்துவம். நடுத்தர குடும்பம் (அ) தாழ்த்தப்பட்ட சாதிக்கு இவ்வளவு விகிதம் என்று எதுவும் கிடையாது.

ஒரு சாதி குறைந்த வெள்ளக்காரனுக்கும், சாதி கூடிய வெள்ளைக்கரனுக்கும் என்ற பிரச்சினை இல்லை. நிற வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தமிழர்களைப் போல் வெள்ளைக்காரனுக்குள்ளையே பிரித்துப் பார்பது இல்லை. கீழ்ச் சாதி மேல் சாதி எல்லாம் நமக்குளே தானே. “discrimination against designated groups, usually in the area of employment.” இது வந்து இங்கு பெண்கள், வலது குறைந்தோர், ஓரினச் சேர்க்கை புரி வோர் என்று வெள்ளையர்களிடம் பாகுபாடு செய்தல் என்பதற்காகத் தான். அதற்காகக் கூட, இத்தனை விகிதம், இந்த group ஐ சேர்ந்தோர் இங்கு இருத்தல் வேண்டும் என்று எந்த சட்டமும் கிடையாது.

நீங்கள் சொல்வது போல், ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரன், விகிதாசாரப்படி பல்கலைக் கழகம் புகுந்து, படித்து ஒரு வைத்தியனாகவோ, (அ) அதற்கு மேலாகவோ வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனது சமூக அந்தஸ்து, உயர்ந்து விட்டது. ஆனால், அவனுடைய பிள்ளையை பாடசாலையில் சேர்க்கும் போதோ, வேலையில் சேர்க்கும் போதோ, எந்த சாதி என்ற கேள்வி விண்ணப்பப் படிவத்தில் இருந்தால், அவன் அந்த சாதியை விட்டு மீழ்வது எங்கனம்?

கனடா பாடசாலை விண்ணப்பப் படிவத்தில் எந்த சாதி என்று கேட்பதில்லை. ஒவ்வொருவரும் தத்தம் வழி. மற்றவன் பிரச்சினையில் மூக்கை நுளைக்கமாட்டார்கள். சந்தோசமாக வாழ வேண்டும் என்பதில் இங்கு எல்லோருக்கும் ஆவல். ஒரு நாளில், பாதி நேரத்தை சந்தோசமாக செலவழிப்பதிலேயே செலவிடுகிறார்கள். பணக்காரன் ஆவது அல்ல அவர்கள் குறிக்கோள்.

என்னைப் பொறுத்த வரையில், சாதி குறைந்தோருக்கு இவ்வளவு சதவிகிதம் என்று சொல்வதால், அரசாங்கமே அவர்களை சாதி குறைந்தோராக காட்டிக் கொடுக்கிறதே!

ஆனால் ஒன்று, வெள்ளையனிடம் தனி நபர் சுதந்திரம் முக்கியமாக கருதப்படுகிறது. நம் நாட்டவரில், சொந்தம், உற்றார், உறவினர் என்று ஒரு கூட்டு சுதந்திரமாக பார்க்கிறோம். நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.

சின்ன உ+ம்: சிறு பிள்ளையை வீதியால் கொண்டுபோகும்போது, நம்மவர்கள் பிள்ளையை கையில் பிடித்துக்கொண்டு பத்திரமாக அழைத்துச் செல்வார்கள். ஏன் அனேகமானவர்கள் தூக்கித் தான் செல்வார்கள். ஆனால் வெள்ளையர்கள், எவ்வளவு நேரமெடுத்தாலும், நடத்தியே செல்வார்கள். கையைக் கூடப் பிடிக்க மாட்டார்கள். மிகவும் சிறு பிள்ளை என்றால் விரலைக் கொடுப்பார்கள். அவர்கள் சொல்லும் விளக்கம் என்னவென்றால், சிறு வயதிலேயே அப் பிள்ளைக்கு தன் மீது நம்பிக்கை வர வேண்டுமாம். தன்னால் தனியாகவும் பாதுகாப்பாகவும் நடக்க இயலும் என்ற நம்பிக்கை வரவேண்டுமாம். இது தான் அவர்களின் தனி நபர் முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்கிறதென்று நம்புகின்றேன்.

கனடாவின் ஒரு மாகாணம் ஃபிரஞ்சு மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழும் மாகாணம். அந்த ஒரு மாகாணத்திற்காக, ஏனைய 9 மாகாணங்களும் [including economic power Ontario], 3 territories எல்லாம் ஃபிரஞ்சையும் அங்கீகரிக்க வைத்திருக்கிறது கியூபெக் மாகாணம். சும்மா பேச்சளவில், கொடுத்தேன் என்று இல்லாமல், கனடாவின் நடுவண் அரசாங்கத்தின் அனேகமான வேலைகளிற்கு ஃபிரஞ்சு மொழி அவசியம். அவர்கள் ஒரு பரீட்சை கூட வைப்பார்கள். இங்கே ஒரு பேச்சு அடிபடுகிறது. வருங்காலத்தில், கனடா அரசாங்கம் முழுக்க ஃபிரஞ்சு மக்களாலேயே ஆகிவிடும் என்று.

இது பத்தாதென்று அவர்கள் மேலும் பல சலுகைகள், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெற்றிருக்கிறார்கள். Media வில் அவர்கள் தங்கள் மாகாணத்தை ஒரு நாடாக கருதியே செய்திகள் வெளியிடுவார்கள். மற்றய நாடுகளுடன் தங்கள் மாகாணத்தையும் ஏதோ இன்னொரு நாடு போல் தான் ஒப்பீடு பண்ணுவார்கள். ஏன் ஃபிரஞ்சு புத்தகங்களில், மாகாணம் என்று இல்லாமல் தனி நாடென்றே எழுதப்பட்டிருக்கும். இதற்கெல்லாம், கனடா அரசாங்கம் சலுகைகள் கொடுத்திருக்கின்றது.

எந்த ஒரு பாராளுமன்ற முடிவு எடுக்கப்பட்டாலும் கியூபெக் இற்கு என்று ஒரு தனி சலுகையைப் பெற்று விடுவார்கள். அவர்கள் மாகாணத்தில் அங்காடிகள் என்று எல்லாம் ஃபிரஞ்சு மொழியில் பெரிதாகவும், ஏனைய மொழிகளில் [ஆங்கிலம் உட்பட], சிறிதாகவே இருக்க வேண்டும். பல்கலைக்கழகத்திலும் ஃபிரஞ்சு மொழி கட்டாயப் பாடம். பேரூந்து ஓட்டுனரிலிருந்து காவல்துறை மட்டும், நீங்கள் ஃபிரஞ்சு மொழியில் பேசினால் உங்களுக்கு சாதகமாக அவர்கள் நடப்பார்கள். 50 தொழிலாளிகளுக்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட அனைத்து வர்த்தக நிலையங்களிலும் அவர்களது கணினி பிரஞ்சு மொழியிலேயே இருத்தல் வேண்டும் என்பது இங்கத்தைய சட்டம்.

அவ்வளவு ஏன், அரச உதவி பெறும் வானொலிகளில் மூன்று பாடல்கள் ஒலிபரப்பினால், 2 பாடல்கள் ஃபிரஞ்சு மொழிலேயே இருத்தல் வேண்டும். கனடாவில் வைத்தியசாலைகள் தனியார் மயம் இல்லை. ஆனால், கியூபெக் இல் தற்போது சில சத்திர சிகிச்சைகள் தனியாரால் செய்யப்படக்கூடியவாறு வந்திருக்கிறது. மற்ற மாகாணங்களில் இவ்வாறு இல்லை. கனடாவில் இருப்பவர்கள் தங்கள் உற்றார் உறவினர்களை இங்கு வரவழைத்து தங்க வைக்க முடியும் [sponsor]. கியூபெக் மாகாண அரசும் ஒரு தேர்வு நடத்தி அதில் தெரிவுசெய்யப்பட்டவர் தான் பின் கனடா அரசாங்கத்தாலும் தெரிவுசெய்யப்படுவார். இப்படிப்பட்ட சலுகைகள் கியூபெக் மாகாணத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.

இப்படி கியூபெக்கிற்கு ஒரு விசேட சலுகை கொடுக்கப்படுதே என்று எந்த ஒரு எதிர்க்கட்சியும் போராட்டத்தில் இறங்கியது இல்லை. கியூபெக் மாகாணத்திற்கு அதிக சலுகை கொடுக்கப்படுகிறது; கனடாவில் அந்த மாகாணத்திற்கு மட்டும் இப்படி சலுகைகள் கொடுப்பது நியாயமில்லை என்று ஒரு வேற்றுமையை ஆங்கில மக்களிடையே உருவாக்கி வாக்குகளை கொள்ளை அடிக்கலாம் என்று எந்த ஆங்கில அரசியல்வாதியும் செய்ததில்லை. நாடு பிரியக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில் அடக்குமுறையைக் கையாழாமல், தங்களை விட மேலதிக சலுகைகளைக் கொடுத்து அகிம்சையை உண்மையில் இன்றைய கால கட்டத்தில் கடைப்பிடிக்கிறார்ககள்.  ஆங்கில அரசியல்வாதிகள் அந்த சலுகைகளை ஒரு அத்தியாவசியம் என்றே பார்க்கிறார்கள். ஆங்கில மக்கள் இதுவரைக்கும் கியூபெக் இற்கு எதிராக கிளர்ந்தெழுந்தது இல்லை.

இவ்வளவு கொடுத்தும், அவர்கள் பத்தாது எங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று இரு தடவை தேர்தல் வைத்து, அரும்பொட்டில் பிரியாமல் இருக்கிறார்கள். என்ன வியற்பாக இருக்கிறதா?

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடையம் என்னவென்றால் இது இவர்கள் நாடே இல்லை. கனடா, அமெரிக்கா எல்லாம் வெள்ளையனின் தேசமே இல்லை. வந்தேறு குடிகள், தங்கள் மொழியை பிரதான மொழியாக சட்டமேற்றியது. ஆதி வாசிகள், இன்றும் சமூக சீர்கேடுகளால் அழிந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இங்கே. ஆதி வாசிகளுக்கு சும்மா இருக்க பணம் கொடுக்கிறார்கள். அவர்கள் முன்னேறக்கூடாது என்று எண்ணியோ என்னவோ. இதே போல் தான் அமெரிக்காவிலும், ஸ்பானிய மொழி பேசுபவர்கள் இருந்தாலும் ஆங்கிலம் தான் அரச மொழி.

ஃபிரஞ்சு மொழிக்காரர் அவர்கள் மொழி மேல் கொண்ட பற்றளவு, தமிழருக்கு இல்லை என்றே தோன்றுகிறது.

_____
CAPital

One response so far

Aug 16 2006


CAPitalZ

Roundabout vs சமிஞ்சை சந்திப்பு

Roundabout

===நன்மை===

  • ஒரு குறிப்பிட்ட நேரம் என்று வாகன போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படாமை. வாகன போக்குவரத்து தடைபடாமல் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கும்.

  • தேவையற்ற காத்திருப்பு இருக்காது.

  • சமிஞ்சை சந்திப்பில் போல் அதிகமாக வாகனம் இல்லாத நேரங்களிலும் கூட குறித்த சமிஞ்சை மாறும்மட்டும் காத்திருக்க வேண்டிய நிலையில்லாமை.

  • சமிஞ்சை சந்திப்பில் நடக்கும் விபத்தால் ஏற்படும் தடங்கல் அளவே இங்கும் ஏற்படும்.

===தீமை===

  • சமிஞ்சை சந்திபை கட்ட தேவையான இட வசதியை விட இதைக் கட்டுவதற்கு சற்று கூடிய இடவசதி வேண்டும்.

  • Roundabout இற்குள் நுழைய எத்தணிக்கும் வாகனங்களை விட உள்ளே இருக்கும் வாகங்களுக்கு முதலுரிமை கொடுக்கப்படுகிறது. இதனால், ஒரு திசை நோக்கி அதிக வாகனங்கள் வருமானால் மற்றய வாகனங்கள் உள் நுழைய தங்களின் சந்தர்ப்பம் வரும் என்று காத்துக்கொண்டிருப்பது முடிவற்றதாகிவிடக்கூடிய அபாயம் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை ஆங்கிலத்தில் “starvation” என்று சொல்வார்கள். தங்களது சந்தர்ப்பம் வரும் என்று காத்திருப்பதே முடிவாகிவிடும்.

சமிஞ்சை சந்திப்பு

===நன்மை===

  • சமிஞ்சைகள் இருப்பதால் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வாகன போக்குவரத்தை உருவாக்கலாம். அதாவது, வெகு தொலைவில் வாகன நெரிசல் ஏற்படுகிறது என்றால், இங்கே அந்த திசைக்கு போகத் தேவையான சமிஞ்சையை நேரம் கூட்டி வாகனங்களைத் தாமதப்படுத்தலாம்.

  • நான்கு (4) வீதிகள் சந்திக்கும், சமிஞ்சை சந்திப்பில் எல்லோரும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட உபயோகம் பெறுவார்கள். அதாவது, ஒருவருக்கும் சந்தியைக் கடக்க முடியாமல் போகும் சந்தர்ப்பம் நிகழாது.

===தீமை===

  • தேவையற்ற வாகன நெரிசல் ஏற்படலாம்.

  • ஒரு திசையில் அதிக வாகனங்கள் வந்துகொண்டிருக்குமானால், அந்த திசையில் தேவையான சமிஞ்சை மாறுவதற்கு காத்துக்கொண்டிருப்பதால் வகன நெரிசல் ஏற்படலாம். மற்றய திசையில் வாகனங்கள் இல்லாதிருப்பினும் சமிஞ்சை அந்தத் திசைக்கும் வீணே உபயோகப்படுத்தப்படும்.

  • சமிஞ்சை சந்திப்பில் சமிஞ்சைகளில் கோளாறு ஏற்பட்டாலோ (அ) மின்சாரம் தடைப்பட்டாலோ அந்த சமிஞ்சை சந்திப்பை வழிநடத்துவதற்கு ஒரு காவல்துறை அதிகாரி பிரசன்னமாக வேண்டியிருக்கும் (அ) வாகன போக்குவரத்து மிகவும் மந்தமான நிலையில் நடைபெறும்.

  • சமிஞ்சை சந்திப்பில் கோளாறு ஏற்பட்டால் அதை சரி பார்க்க ஒரு வல்லுனரின் உதவி தேவைப்படும். இதனால் வல்லுனருக்கு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டு அவர் அதை திருத்தும் வரைக்கும் வாகன போக்குவரத்து மந்தமாக காணப்படும். இதனால் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும்.

_____
CAPital

One response so far

Aug 02 2006


CAPitalZ

புலி பற்றிய தமிழ் நாட்டுத் தமிழர் நிலைப்பாடு

இது ஒரு மிகவும் சிக்கலான விடயம்.

இந்தியா தமிழனுக்கு உண்மையில் ஆதரவு அளிக்கவில்லை துரோகம் தான் செய்தது. ஆனால், இந்த விசயம் இந்தியர்களுக்கு எட்டாத வண்ணம் இந்திய அரசாங்கமும், பார்ப்பனர்களே அதிகமாக இருப்பதால் [அண்மையில் வெளியான புள்ளி விபரம் சொல்கிறது] எல்லா செய்தி ஊடகங்களும் செய்துவிட்டன.

இதனால், ஈழத்தமிழர்கள் இந்தியா துரோகம் செய்துவிட்டது என்று சொன்னால் தமிழ் நாட்டுத் தமிழர்கள் நாங்கள் ஏதோ வேண்டுமென்று இந்தியா மீது பழி போடுவதாக எண்ணுகிறார்கள். எங்களுக்கு ஈழத்தின் மேல் உள்ள பாசம் போல் அவர்களுக்கு இந்தியா மேல்.

தமிழ் நாட்டு தமிழனையையும் கோபிக்கக் கூடாது இந்தியாவையும் நண்பனாக நம்பக் கூடாது. இது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போல் இருக்கிறது.

இதற்காக தமிழ் நாட்டு தமிழனுடன் தர்க்கம் செய்து அவர்கள் மனதை புண்படுத்தினால், அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரிக்கும். இந்தியா அயலவரான தமிழீழத்தைப் பகைத்துக்கொண்டது போல் தமிழீழம் அயலவரான தமிழ் நாட்டை எக்காலத்திலும் பகைத்துக் கொள்ளக் கூடாது.

தலைவர் சிங்களவர்களையே எதிரியாக நினைக்காமல் சிங்கள அரசை மட்டுமே குற்றம் சொல்கையில் நாங்கள் பிற மக்களை எதிரியாக ஒருபோதும் நினைக்கக் கூடாது. இது நாள் வரைக்கும் சிங்கள பொது மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை. ஃகெஸ்புல்லா யூதர்களை அழிக்கவேண்டும் என்று இலக்கே இல்லாமல் இஸ்ரேல் நாட்டிற்குள் ஏவுகணைகளை விட்டுக்கொண்டிருக்கிறது. சிங்களவர்கள் எங்கள் வருங்கால அயலவர்கள்; அதே போல் தமிழ் நாட்டு தமிழர்களும் வருங்கால அயலவர்கள்.

ஒரு சிலர் எப்போதும் புலிகளை குற்றம் சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். சோ போன்ற பார்பனர்களுக்கு வேறு என்ன வேலை. தமிழீழத்திலேயே புலிகளுக்கு எதிராக வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள் தானே. அதற்காக மக்கள் புலிகளை எதிர்க்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை தானே. சிலரின் அவதூற்று வேலைகளால் தமிழ் நாட்டுத் தமிழர்கள் அனைவரையும் நாம் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது நன்றன்று.

இந்திய மக்கள் முழுவதையும் புரிந்து கொள்ள வைப்பதென்பதையும் காட்டிலும், தமிழ் நாட்டு மக்களை புரிந்துகொள்ள வைக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் எங்கள் தாய்நாடு, அயல்நாடு. வெறும் வாய்ச்சண்டை மனஸ்தாபத்தில் முடியும். பல உண்மைச் சம்பவங்கள், செய்திகள், ஆதரபூர்வமான கட்டுரைகள் என்பனவற்றை அவர்களுக்கு எடுத்துச் செல்வது எங்கள் எல்லோருடைய கடமையாகும்.

கீழே இதோ ஒரு தமிழ் நாட்டுத் தமிழனின் ஈழத்தின் பால் கொண்ட உணர்வு.

======

ஈழத்தை பற்றிய
கம்யூனிச சிந்தனாவாதியான தோழர் தியாகுவின் கட்டுரை ஒன்றை இங்கு தருகிறேன் -

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சென்னை, சேலம், மதுரையில் நடத்திய ஈழத்
தமிழர்கள் பாதுகாப்பு மாநாடுகளில் தமிழ் தமிழர் இயக்கத் தலைவர் தோழர் தியாகு
பங்கேற்று உரை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய உரைகளிலிருந்து.

இப்போது ஈழத்திலே நடக்கும் பேச்சு வார்த்தைக்கான சூழலை உருவாக்கியதே
விடுதலைப்புலிகள் தான்.

நாங்கள் அமைதிக்காக நிற்கிறோம். நாங்கள் போர் வெறியர்கள் அல்ல. நாங்கள்
ஆயுதங்களை காதலிக்கிறவர்கள் அல்ல என்று இந்த உலகத்திற்கு மெய்ப்பிக்கிற
விதத்திலே அவர்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார்கள். பேசுகிறாயா பேசத் தயார்.
அந்த பேச்சு வார்த்தையிலே நீ என்ன தீர்வைச் சொல்லப் போகிறாய் சொல் என்றார்கள்.
கடந்த காலத்திலே தந்தை செல்வா சிங்கள ஆட்சிகளோடு பேசினார். கடந்த காலத்திலே
தமிழர் அய்க்கிய விடுதலை கூட்டணியின் தலைவர்கள் பேசினார்கள். அந்த
பேச்சுகளுக்கும் பிரபாகரன் அறிவித்த பேச்சுகளுக்கும் ஒரு பெரும் வேறுபாடு
இருக்கிறது. தந்தை செல்வா அவர்களுக்கும் பேச்சு வார்த்தை நடத்திய
தலைவர்களுக்கும் அரசியல் வலிமையும் அறவழி வலிமையும் இருந்தது.

அவர்களிடம் ஆயுத வலிமையும், படை வலிமையும் இல்லை. ஆனால் தம்பி பிரபாகரன் தன்
தேசத்திற்கென்று ஒரு படையும் வைத்துக் கொண்டு இராணுவ வலிமையோடு கரங்களில்
உறுதியான ஆயுதத்தோடு பேச்சு வார்த்தைக்குப் போனார். பாலஸ்தீனப் பிரச்சினைக்காக
ஓஸ்லோவிலே பேச்சு வார்த்தை நடந்தது. பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் பேசுவதற்குப்
போனார். இப்போது விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசு ஜெனிவாவிலே பேச்சு
நடத்துகிறது. இதுகூட இராஜேபக்சேவிற்கு வெற்றி தான் என்று ‘இந்து’ ஏடு எழுதி
தன்னுடைய அரிப்பை தீர்த்துக் கொள்கிறது. என்ன சொன்னார் ராஜபக்சே? ஆசிய
நாட்டுக்குள்ளேதான் பேசுவோம் என்றார். இப்போது நடக்கும் பேச்சுவார்த்தை
அய்ரோப்பிய நாடுகளால் கவனிக்கப்படுகிறது. உலகம் கவனிக்கிற பிரச்சனையாக
இருக்கிறது.

ஜப்பானிலிருந்து போகிறார் தூதுவர்; கொழும்புவிலிருந்து கிளி நொச்சிக்கு
போகிறார். கிளி நொச்சிக்குப் போய் அங்கே அரசுக்குரிய மரியாதையோடு பிரபாகரனை
சந்தித்துப் பேசுகிறார். இதெல்லாம் அவர்களுக்கு வருத்தம், சங்கடம்.
ஓசுலோவிலேயிருந்து நார்வே தூதர் எரிசோல்கைம் நாடு விட்டு நாடு கண்டம் விட்டு
கண்டம் தாண்டி வருகிறார். கிளி நொச்சியிலே இருக்கிற தலைவரைப் போய்
பார்ப்பதற்காக! கிளிநொச்சியிலே ஒரு செய்தியாளர் சந்திப்பு நடக்கிறது. உலகத்து
பத்திரிகை யாளர்கள் எல்லாம் வருகிறார்கள். உள்ளூர் பத்திரிகையாளர்களையே
சந்திப்பதற்கு துணிச்சல் இல்லாத தலைவனும், தலைவியும் இங்கே வயிறு எரிகிறார்கள்.

அய்யோ பிரபாகரனுக்கு இவ்வளவு கூட்டமா என்று! அப்படி ஒரு செல்வாக்கோடு பெருமித
நிலை யிலே இருந்து கொண்டு பிரபாகரன் பேசினார். அதே போல்தான் ஜெனிவாவிலும்
இப்போது பேச்சு வார்த்தை நடக்கிறது. எந்த இடம்? சுவிட்சர் லாந்தினுடைய
தலைநகரம். சுவிட்சர்லாந்தினுடைய தேசியக் கொடி என்ன தெரியுமா? செஞ்சிலுவை
சங்கத்தினுடையது.

உலகத்தில் அமைதிக்கு மறு பெயரான அரசு ஒன்று உண்டு என்றால் அது சுவிட்சர்லாந்து
தான். முதல் உலகப் போர் இரண்டாம் உலகப் போர் நடந்தன. அய்ரோப்பிய வல்லரசுகள் இரு
குழுக்களாக பிரிந்து மோதின. இந்த இரண்டு போரிலும் ஈடுபடாத ஒரே அய்ரோப்பிய நாடு
சுவிட்சர்லாந்து. இங்கே இந்தியைத் திணிக்கிற போது நாம் சொல்லுகிறோம். தமிழையும்
ஆட்சி மொழியாக்கு என்கிறோம். ஒரே நாட்டில் எத்தனை மொழிகளை ஆட்சி மொழிகளாக்க
முடியும் என்று கேட்கிறார்கள். நாம் சொல்லுகிறோம் – சுவிட்சர்லாந்தைப் பார்.
அந்த நாட் டிலே மூன்று மொழி பேசுகிறார்கள்.

மூன்று மொழிகளையும் ஆட்சி மொழிகளாக வைத்திருக்கிறார்கள். அதனால் மூன்று இனங்கள்
சேர்ந்து வாழ் கின்றன. இலங்கையிலே, ஒரு காலத்தில் கொல்வின் டிசில்வா சொன்னார்.
இரண்டு மொழிகளையும் அங்கீகரிக்கிறேன் என்று இரண்டு மொழிகளையும் அங்கீகரித்து
சமத்து வம் கொடுத்தார்.

அப்போது தான் இரண்டு மொழிகள் ஒரு நாடு என்ற நிலை வரும். இல்லை, இல்லை சிங்களம்
மட்டும் தான் ஆட்சி மொழி என்றால், ஒரு மொழி இரண்டு நாடுகள் என்று பிரிந்து
போகும் என்று அவரே சொன்னார்.

அய்க்கிய நாடுகளுடைய தலைமையகத்தை நியுயார்க்கிலே அமைத்தார்கள். இரண்டாம் உலகப்
போருக்கு பிறகு, அமெரிக்க வல்லரசுக்கு இருந்த வலிமையை கருதி அங்கே
உருவாக்கினார்கள். ஆனால், அய்.நா.வின் இரண்டாவது தலைமையகத்தை அய்ரோப்பாவிலே
உருவாக்க வேண்டும் என்று கருத்து வந்தபோது ஜெனிவாவிலே தான் உருவாக்கினார்கள்.
பாலஸ்தீன விடுதலை அமைப்பினுடைய தலைவர் யாசர் அராபத் பாலஸ்தீன தேசிய விடுதலை
அமைப்பினுடைய தலைவராக இருக்கிற போது தான் கோருகிற தாயகத்தினுடைய ஒரு சதுர
அங்குல நிலத்தைக்கூட தன் கையிலே வைத்திருக்காத போது உலகம், அந்த அமைப்பை
அங்கீகரித்தது.

அவரை ஓர் அரசு தலைவராகக் கொண்டாடியது. அவரை அய்க்கிய நாடுகள் அவைக்கே
அழைத்தார்கள். வாருங்கள் அராபத் இங்கே வந்து பொதுச் சபையிலே உரையாற்றுங்கள்
என்று கேட்டார்கள். அமெரிக்காவால் தடுக்க முடியவில்லை. என்ன செய்தார்கள்
தெரியுமா? நியுயார்க்கில் அய்.நா. கட்டிடம் இருக்கும் அந்த வளாகம் ஒரு தனி
நாட்டுக்குரிய அதிகாரம் கொண்டது. ஆனால், அந்த கட்டிடத்திற்குள் நுழைய வேண்டும்
என்றால், அமெரிக்க இறையாண்மைக்குட்பட்ட நியூயார்க் வழியாகத்தான் செல்ல
வேண்டும்.

எனவே, அமெரிக்கா யாசர் அராபத் திற்கு விசா கொடுக்க மறுத்தது. அமெரிக்கா அவரை
அய்.நா.விலே பேச விடக் கூடாது என்பதற்காக, “சீப்பை மறைத்து வைத்தால் கல்யாணம்
நின்று விடுமா?” அய்.நா.அராபத்துக்காக நியூயார்க்கை விட்டு ஜெனிவாவுக்கு
வந்தது. ஜெனிவா வில் அய்.நா.வின் பொதுப் பேரவை கூடியது. யாசர் அராபத் அங்கே
வந்து முழங்கினார். ஜெனிவாவிலே நின்று பேசினார். இராணுவ சீருடையிலே வந்தார்.
அவர் எப்போதும் இடுப்புக் கச்சையிலே ஒருகைத் துப்பாக்கியை வைத்திருப்பார்.

அவர் சொன்னார்: நான் இந்த உலகப் பேரவையின் முன் நிற்கிறேன். ஒரு கையிலே அமைதியை
குறிக்கிற ஆலிவ் இலைகளோடு வந்திருக்கிறேன். இன்னொரு கையிலே போருக்குரிய
துப்பாக்கியோடு வந்திருக்கிறேன்; எது வேண்டும்? இஸ்ரேலே சொல்! துப்பாக்கியா?
ஆலிவ் இலையா? அமைதி வேண்டும் என்றால் அமைதி; போர் வேண்டும் என்றால் போர் என்று
அவர் முழங்கினார். அந்த ஜெனிவாவிலே தான் இப்போது புலிகள் பேசுகிறார்கள். இது
என்ன தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையா, எங்கே வேண்டும் என்றாலும் உட்கார்ந்து
பேசு வதற்கு? ஒரு தேசத்துக்கும், இன்னொரு தேசத்துக்குமான உரையாடல்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் எது தெரியுமா? ஜெனிவா! விடுதலைப் புலிகள் சிங்கள அரசு
பிரதிநிதிகளோடு பேசுகிறார்கள். உலகம் ஒத்துக் கொண்டிருக்கிற நார்வே அரசுனுடைய
அனுசரணையோடு பேசுகிறார்கள் என்றால், இந்த உலகம் தமிழீழப் புலிகளை அவர்களுடைய
போராட்டத்தை அங்கீகரிக்கிறது என்று பொருள். இங்கிருக்கிற ஒன்றையணா,
மூன்றையணாக்கள் அங்கீகரிக்காவிட்டால் நமக்குக் கவலையில்லை. (கைதட்டல்) உலகம்
அங்கீகரிக்கிறது. நீ அங்கீகரிக்காவிட்டால் எங்களுக்கு என்ன கவலை? விடுதலைப்
புலி களுடைய அரசியல் ஆலோசகர், முதுபெரும் அரசியல் அறிஞர், வரலாற்று அறிஞர்,
தத்துவ அறிஞர் பாலசிங்கம் நலிந்த உடல்நிலையோடு அந்தக் குழுவிற்கு தலைமை ஏற்றுச்
செல்கிறார்.

இந்த தமிழ்நாட்டில், அவருக்கு மருத்துவமனையிலே சிகிச்சை அளித்தால்கூட இங்கே நில
அதிர்ச்சி வந்துவிடும் என்றார்கள். விட மாட்டோம் என்கிறார்கள். அந்த பால
சிங்கம் தான் ஜெனிவாவில் புலி களின் குழுவுக்குத் தலைவர். புலிகளின் அரசியல்
பிரிவு தலைவரும், நாள் தோறும் உலக பத்திரிகையாளர்களை கிளிநொச்சியில்
சந்தித்துக் கொண்டிருக்கிறவருமான சுப. தமிழ்ச் செல்வன் ஜெனிவா போகிறார்.
ஈழத்திலே புலிகளின் காவல்துறை படையின் தலைவராக இருக்கும் நடேசன் பேச்சு
வார்தைக்கு ஜெனிவாவுக்குப் போனார். நடேசன் வருகிறார் என்றவுடன் சிங்கள அரசு
என்ன செய்தது தெரியுமா?

அவர்கள் போலீஸ் படை தளபதியை அனுப்புவதால் நாமும் போலீஸ் படை தளபதியை
அனுப்புவோம் என்றார். புலிகளுக்கு கிடைக்கிற மரியாதை நமக்கு கொஞ்சம்
கிடைக்கட்டுமே என்று ராஜபக்சே துடிக்கிறார். பேச்சு வார்த்தை நடத்துவதற்கே
சிங்கள தீவிரவாத கட்சிகள் தடையாக உள்ளன. ராஜபக்சேயுடன் கூட்டணி வைத்த கட்சிகள்
அவை. ‘ஆகா பேச்சா என்ன சொல்லி நாங்கள் ஆதரவு அளித்தோம். எப்படி நீங்கள் வாக்கு
கேட்க வந்தீர்கள்?’ என்று கொதித்தார்கள். வாக்கு கேட்க வந்தவர்களை வாக்கு
கேட்டு முடிந்த பிறகு யாராவது நினைவில் வைத்துக் கொண்டிருப்பார்களா?
ராஜபக்சேவுக்கும் அது நினைவில்லை. ஆனால், சிங்கள தீவிரவாதிகள் நினைவு
படுத்தினார்கள்.

நினைவு படுத்தியதற்கு பிறகு ராஜபக்சே சொன்னார், “நீங்கள் ஒன்றும்
கவலைப்படாதீர்கள். இந்த உலகம் பேசச் சொல்கிறது. நார்வே தூதர் வந்து விட்டார்.
ஜெனிவாவிலே பேசுவதற்கு பிரபாகரனும் ஒப்புக் கொண்டு விட்டார். எனவே பேசித்தான்
ஆக வேண்டும், எதையாவது பேசுவோம்” என்றார். அதாவது பேச்சு வார்த்தைக்காகவே
பேசுவது. அதில் ஒரு போதும் எந்த புரட்சியாளனுக்கும் இணக்கம் இருக்காது.
அண்மையில் “தீக்கதிர்” ஏட்டில் ஈழத் தமிழின சிக்கல் குறித்து ஒரு கட்டுரை வந்து
இருக்கிறது. அந்த கட்டுரையிலே வரலாற்றைத் தொகுப்பாக எழுதி விட்டு, கடைசியில்
தமிழினச் சிக்கலுக்கு என்ன தீர்வு தெரியுமா? அமைதி வழியில் சமாதான தீர்வு
வேண்டும் என்று விரும்புகிறோம் என்று முடித்திருந்தார்கள். இந்த “தீபாவளி”
போனசிலேயே உங்களாலே சமாதான தீர்வு ஏற்படுத்த முடியவில்லை.

ஒரு இனத்தின் தேச விடுதலையில் சமாதான தீர்வு அமைதி வழியில் எப்படி நடக்கும்?
(கைதட்டல்)

ஜெனிவா பேச்சு வார்த்தையில் நடந்தது என்ன?

இலங்கையில் ஏற்பட்ட ஆழிப் பேரலை துயரத்தில் 75 சதவீத துயரம் தமிழர்களைச்
சார்ந்தது. அன்றைக்குக் கூட “இந்து”வின் கவனம் எதிலே இருந்தது தெரியுமா?
“இந்து” கட்டம் கட்டி செய்தி போட்டது. ஆழிப் பேரலை செய்திகள் ஒரு பக்கம்.
கட்டம் கட்டிப் போட்ட செய்தி என்ன தெரியுமா? ‘பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?’
என்று செய்தி போட்டது! இதோ இந்த பிரபாகரனை இந்திய படையினர் வெல்ல முடியவில்லை.
சிங்கள படையினால் வெல்ல முடியவில்லை. சிங்கள சூழ்ச்சி, பார்ப்பன சூழ்ச்சி,
அமெரிக்க சூழ்ச்சி எதற்கும் இவனை ஒன்றும் செய்ய முடியவில்லை? ஆழிப் பேரலை
விபத்திலாவது செத்துப் போக மாட்டானா என்ற ஆசையை “இந்து” ஆதங்கத்தோடு எழுதியது.

பிரபாகரன் சொன்னார் பன்னாட்டு உதவி அமைப்புகள் போடுகிற நிபந்தனைகளில் ஏற்க
முடியாதவை எல்லாம் இருக்கின்றன. இருந்தாலும் இப்போது அதைப்பற்றி கவலை இல்லை.
உடனடியாக எம் மக்களுக்கு உதவி கிடைக்க வேண்டும். எனவே பாதிக்கப் பட்ட
மக்களுக்கு உதவும் சுனாமி கட்டமைப்பை உருவாக்குவோம் என்றார். பல காலம்
இழுத்தடித்து கட்டமைப்பை உருவாக்கினார்கள். கடைசியில் அந்த கட்டமைப்பை
எதிர்த்து சிங்களர்கள் நீதி மன்றத்திற்குப் போய் அதை செயல்பட விடாமல்
செய்தார்கள். இந்த நிலையில்தான் ஜெனிவா பேச்சு நடந்திருக்கிறது.

பேச்சு வார்த்தையில் இலங்கை குழுவினருக்கு தலைவர் யார் தெரியுமா? ஒரு பெரிய
வழக்கறிஞர் பேச்சு வார்த்தையிலே போய் உட்கார்ந்த உடனே பாலசிங்கம் கேட்கிறார்.
யாரப்பா இவர்? முன் வரிசையிலே உட்கார்ந்து இருக்கிறார்? கடற்படை தளபதியோ
பின்னாலே அமர்ந்திருக்கிறார். அந்தக் குழுவுக்குள்ளேயே போட்டி! யார் முன்னால்
உட்காருவது என்று. சரி இருக்கட்டும் இவர் முன்னாலே உட்கார்ந்து இருக்கிறார்.
இவர் யார் என்று கேட்டால், சட்ட அறிஞர் என்கிறார்கள். அவர் தனது சட்ட அறிவை
எப்படி பயன்படுத்தினார் தெரியுமா? நான்கு ஆண்டுகளாக நடை முறைப்படுத்தப்பட்டு
வருகிற போர் நிறுத்தத்தை, இலங்கை அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மானது என்று
எழுதியவர் தான், பேசியவர் தான் இந்த சட்ட அறிஞர்.

அவர் எழுந்து பேச ஆரம்பித்த உடனே என்ன சொன்னார் தெரியுமா? உங்கள் மீது
வழக்குகள் இருக்கிறது. யார் மீது? புலிகள் மீது. என்ன வழக்கு? யாழ்ப் பாண
துரையப்பாவை நீங்கள் கொலை செய்து விட்டீர்கள் என்றார். உடனே பாலசிங்கம்
சொன்னார், “அய்யா ஒன்றை தெரிந்துக் கொள்ளுங்கள். நான் ஒரு புத்தகம்
எழுதியிருக்கிறேன். அந்த புத்தகத்திலேயே துரையப்பாவை நாங்கள் தான் கொன்றோம்
என்று எழுதியிருக்கிறேன். ஒரு துரையப்பாவை அல்ல

உங்கள் ஆட்கள் 40 ஆயிரம் பேர் உயிரை நாங்கள் எடுத்திருக்கிறோம். அதுவல்ல இன்று
பிரச்சினை. போர் நிறுத்தம் பற்றி பேசு என்று பாலசிங்கம் சொன்னார். அங்கே ஒரு
அம்மையார் முஸ்லீம்களுடைய பிரதிநிதியாக இலங்கை அரசு குழுவிலே போனார்.
முஸ்லீம்களும் தமிழர்கள் தான். இலங்கையில் மூன்று இனங்கள் இருக்கிறது என்று
பிரித்தாளும் சூழ்ச்சியை சிங்கள அரசு அரங்கேற்றி வருகிறது. சிங்களர், தமிழர்,
முஸ்லீம் என்று பிரிக்கிறார்கள். அஸ்ரத் என்ற அந்த அம்மையார் எழுந்து
சொல்லுகிறார் குழந்தைகளை எல்லாம் புலிகள் படைகளில் சேர்த்திருக்கிறார்கள். இது
வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார். உடனே தமிழ்ச் செல்வன் சொன்னார், குழந்தைகள்
கூட படையினில் சேர வேண்டிய சூழ்நிலைகளை யார் ஏற்படுத்தியது எண்ணிப்பார்?” என்று
கேட்டார்.

விஜயரத்னே என்ற பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இருந்தார். அந்த பாதுகாப்பு
அமைச்சர் சொன்னார், ‘புலிகள் சிறுவர்கள். இந்த சிறுவர்கள் சிங்களப் படைகளை
பார்த்ததும் சிறுநீர் கழித்து விடுவார்கள்’ என்று சொன்னார். அதற்குப் புலிப்
படையிலே இருந்து ஒரு சிறுவன் பதில் சொன்னான். ‘ஆமாம், நான் சிறுவன் தான், ஆனால்
என் தாயை நேசிப்பதற்கு எவரும் எனக்கு சொல்லித்தரத் தேவையில்லை. நான் சிறுவனாக
இருப்பதே போதும்’ என்று அவன் பதில் சொன்னான்.

பாலஸ்தீன போராட்டத்தில் இஸ்ரேலுடைய டாங்கிகள், பீரங்கிகளை எதிர்த்து, மேற்கு
கரையிலும் காசா பகுதியிலும் கல்லெடுத்து அடித்த பாலஸ்தீன சிறுவர்களை தெரியுமா
உங்களுக்கு? உலகத்தில் நடந்த முதல் பாட்டாளி வர்க்க புரட்சி 1870 பாரீஸ்
கம்யூன் புரட்சி அதுபற்றி லெனின் எழுதுகிறார்.

“இந்த பாரீங் கம்யூன் புரட்சியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது அவர்கள் வீட்டு
பெண்களும், குழந்தைகளும் தெருவுக்கு வந்து இராணுவத் தோடு போரிட்டார்கள்” என்று
பெருமையோடு எழுதுகிறார். ஈழத்தில் நடப்பது தேசிய விடுதலை போராட்டம். தேர்தலில்
ஓட்டு போடுவது அல்ல, வயது பார்ப்பதற்கு! இது விரல் மேல் ‘மை’ குத்திக் கொள்கிற
போராட்டம் அல்ல; நெற்றியிலே ரத்தத் திலகமிடும் போராட்டம் என்பது நினைவிருக்
கட்டும். (கைதட்டல்)

பிப்ரவரியில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை முழுமையாக
அமுல்படுத்த வேண்டும் என்பதே ஜெனிவாவில் புலிகள் முன் வைத்த முக்கிய கோரிக்கை.
இதனுடைய பொருள் என்ன? மற்ற ஆயுத குழுக்களின் ஆயுதங்களை களைய வேண்டும். கருணா
என்ற துரோகியை பாதுகாத்து கையிலே ஆயுதம் கொடுத்து போராளிகள் மீது பொதுமக்கள்
மீது அமைதியை நேசிக்கிற அரசியல்வாதிகள் மீது, வன்முறையை ஏவிக் கொண்டிருக்கிற
கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும், என்று புலிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இலங்கைக் குழு சொன்னது – நாம் சண்டை நிறுத்த ஒப்பந்தம் என்று போட வேண்டாம்.
சண்டை நிறுத்தம் என்று போட்டால் போதும் என்றார்கள். நார்வே தூதர் எரிக்சோல்ஹைம்
சொன்னார், ‘அப்படிப் போடுவதை விட பேசாமல் சண்டை என்றே போட்டு விடலாம்’ என்று
சொன்னார். அதன் பிறகுதான் போர் நிறுத்த ஒப்பந்தம் என்று எழுதியே இரு தரப்பும்
கையெழுத்துப் போட்டனர்; சிங்கள பேச்சு வார்த்தைக் குழுவின் திட்டங்கள் இதன்
மூலம் தோல்வி அடைந்தன.

பேச்சு வார்த்தை முடிந்ததற்குப் பிறகு சுவிட்சர்லாந்தில் ஒரு மிகப் பெரிய
தமிழர் கூட்டத்திலே புலிகள் அரசியல் பிரிவைச் சார்ந்த தமிழ்ச்செல்வன் பேசினார்.
தலைப்பு என்ன தெரியுமா? விடுதலையின் வாசலில்! ஆம்; தமிழ் ஈழம் வாசலில் நின்று
கொண்டிருக்கிறது. அதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் தமிழ்ச்
செல்வன் மிகத் தெளிவாக சொன்னார். வாசலில் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்க
முடியாது. எனவே விரைவில் விடுதலைப் போரில் நாங்கள் நுழையப் போகிறோம். அதற்கு
நீங்கள் அணியமாகுங்கள் என்றார்.

புலிகள் மீதான தடை; பயமுறுத்துகிற பயங்கரவாதச் சட்டம்; பொய் வழக்குகள்;
எதனாலும் ஈழ விடுதலை மலர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அமெரிக்க
தூதரின் மிரட்டலின் விளைவாக தமிழகம் எழுச்சி பெற்றிருக்கிறது. தமிழ் ஈழ
விடுதலைப் போருக்கு துணை நிற்கிற அந்த உணர்வோடு நம்முடைய தமிழ் மக்களுக்கென்று
உலக அரங்கிலே முதற்கொடி பறப்பதற்கு வழி வகுக்கிற அந்த ஊக்கத்தோடு நம்முடைய
முயற்சியை தொடருவோம்.

- இவ்வாறு தியாகு தனது உரையில் குறிப்பிட்டார்.

நன்றி முத்தமிழ் கூகிள் குழுமம்.

_____
CAPital

One response so far

Jul 09 2006


CAPitalZ

முன்னேறு வேகமாக

பாடசாலையில், அறிவு கூடிய மாணவர்கள் என்று கணிக்கப்படும் மாணவர்கள் மேல் தர வகுப்புக்கு காலம் கடத்தாமல் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். [fast tracking]

நாங்கள் நவீன யுகத்தில் இருக்கிறோம்.  எங்களுக்கு முன் கண்டறிந்த எல்லாவற்றையும் மாணவர்கள் கற்று பின்னரே மாணவர்களால் ஏதாவது புதிதாக கண்டுபிடிக்க வேண்டிய நிலமை.  இப்படி ஆயின், முன்னோர் கண்டுபிடித்தவற்றை கற்றறியவே கல்விக் காலம் முழுவதும் முடுந்து விடும்.  பிறகு மாணவர்கள் கண்டுபிடிக்கும் நேரம் அவர்கள் வாழ்வில் இறுதிக் காலமாகத் தான் இருக்கும்.  மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும், உயிர் நிலைக்க மாட்டா.

_____
CAPital

No responses yet

Jul 09 2006


CAPitalZ

அரசாங்கத்தால் செய்யப்படவேண்டிய தொழில்கள்

எந்தெந்த தொழில்கள் மனித அடிப்படை அத்தியாவசியத்திற்கு தேவையோ அவை அரசாங்கத்தால் நடத்தப்பட வேண்டும் [நீர், மின்சாரம், தபால் சேவை, உள்ளூர் பேரூந்து சேவை, புகையிரத சேவை].  அது ஒரு நியாயமான விலையை அப் பொருள்களுக்கு/ சேவைக்கு வழங்கும்.  இலாபத்திற்கு என்று விலைகள் அளவுக்கதிகமாக உயராமல் இருக்க உதவும்.

எந்தெந்த தொழில்கள் சமூக நலனை பாதிக்குமோ அவை அரசாங்கத்தால் நடத்தப்பட வேண்டும் [மதுபானம், சூதாட்டம், அதிட்ட லாபச் சீட்டு]  அது ஒரு ஒழுங்கு முறையை கடைப்பிடிக்க உதவும்.  நேரங்கடந்த விற்பனையோ/ தரம் கெட்ட விற்பனையோ நடக்காமல் இருக்க உதவும்.

இவை ஒவ்வொரு நாட்டைப் பொறுத்ததுமே.

_____
CAPital

No responses yet

பழைய இடுகைகள் »