தமிழர்கள் அனைவருக்கும் இந்த மாதம், இந்த நாட்கள் ஒரு மிகவும் துன்பகரமான காலம்; வலி சுமந்த மாதம். 40,000 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என முன்னாள் ஐநா சபாநாயகர் கூறியிருந்தார். எம் தமிழீழத் தேசத்தின் தலைவரையும் இழந்த[?] மாதம்.
இந்த ஒரு வருட காலம் கடந்த பின்னும், எம் மதிற்புக்குரிய தலைவரை துறந்த பின்னும், நாம் ஏன் இன்னும் தமிழீழக் கனவோடு சிதறிக்கிடக்கின்றோம்? தலைவர் இறந்துவிட்டார்? இறக்கவில்லை? எதை நம்புவது? எது பொய்? என்று யோசித்து யோசித்தே எதையும் செய்யாமல் கிடந்துவிட்டோம். Shakespeare இன் Hamlet போல் யோசித்து யோசித்தே தக்க தருணத்தை இழந்துவிட்டோம்.
பத்மநாதன், தலைவரால் வெளிநாட்டு தொடர்பாளராக மே 2009 இற்கு பல மாதங்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தார்
பலருக்குத் தெரியுமோ தெரியவில்லை, தலைவரால் நியமிக்கப்பட்டவர் தான் திரு. பத்மநாதன் அவர்கள். புலிகளின் வெளிநாட்டு தொடர்பாளராக சனவரி 3, 2009 அன்றே செய்தி வெளியாகிவிட்டது. அவர் நியமிக்கப்படதை அரசியல் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்களும் ஊர்சிதப்படுத்தியிருந்தார். தமிழீழப் படை மிகவும் குறுகிய இடத்திற்குள் முற்றுகையிடப்பட்டதால், வெளிநாட்டுத் தொடர்புகளை இலகுவாக/அடிக்கடி மேற்கொள்ள கடினம் என்ற அடிப்படையிலேயே திரு. பத்மநாதன் அவர்களை தலைவர் நியமித்தார்.
சிலர் ஏற்கனவே தேடப்படுபவரான பத்மநாதனை நியமித்தது பிழை என்று சொல்கிறார்கள். புலிகள் இயக்கத்தின் பிரதிநிதியாக, தலைவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு நபரைத் தான் நியமிக்கலாமேயொழிய அமெரிக்கவிலோ (அ) பிரித்தானியாவிலோ ஒருவரை நியமித்து, பின் அவர் தலைவருடனான தொடர்பை ஏற்படுத்தும்போது அவரை கைது செய்து (அ) ஒட்டுக்கேட்டால் அப்படி நியமித்ததன் பயனே அற்றுப்போய்விடும்.
நியமிக்கப்பட்டதிலிருந்து பத்மநாதன் பல பத்திரிகை அறிக்கைகளை விட்டிருந்தார். TamilNet இன் 2009 இற்கான News பகுதியைப் பார்த்தால் தெரியும். சாதாரணமாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு பத்மநாதன் சனவரி மாதமே தலைவரால் வெளிநாட்டுத் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார் என்பது தெரியாமலிருக்கலாம். ஆனால் வெளிநாடுகளில் இயங்கும் “உலகத் தமிழர்” அமைப்புகளுக்கு இது தெரியவில்லை என்று சொன்னால் அது பச்சப் பொய்.
ஆனால், பத்மநாதனை வெளிநாட்டுத் தொடர்பாளராக நியமித்தது உலகத் தமிழர் அமைப்பிற்கு பெரும் பின்னடைவாக இருந்தது. தாங்களே “வெளிநாட்டு உலகத் தமிழரின்” பிரதிநிதி என்று வெளிநாடுகளில் மார்தட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு, தங்களைத் தவிர்த்து வேறு ஒருவரை வெளிநாட்டு தொடர்பாளராக தலைவர் நியமித்தது பொறுக்கமுடியாமல் இருந்தது. இருந்தாலும், அந்தக் காலகட்டத்தில் ஒன்றும் செய்யமுடியாமலும் இருந்தது.
இப்படியுமா என்று யோசிப்பவர்களுக்கு சில கடந்த கால சம்பவங்கள். சில வருடங்களுக்கு முன்பு தலைவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் தமிழீழத்திலிருந்து கனடா வந்திருந்தார். அவர் உலகத் தமிழர் அமைப்பின் நிர்வாகத்தை/ நிதி கணக்குகளை அலசினார். இதனால் அவருக்கும், கனடாவில் உலகத் தமிழர் அமைப்பின் தலைமைப்பீடத்திற்கும் முறுகல் நிலை ஏற்பட்டது. இவ்வளவு நாளும் பாதுகாப்பாக இருந்த நபர், RCMP இனரால் பிடிக்கப்பட்டு உடனடியாக நாடு கடத்தப்பட்டார்.
ரொறொன்டோ மாநகரை பல பிரிவுகளாக பிரித்து உலகத் தமிழர் பொறுப்பாளர்களுக்கு வளங்கப்பட்டிருந்தது. அதில் ஒரு மேற்கு பகுதி பொறுப்பாளர் பதவி ஏற்று தாயகம் சென்று தலைவரை எல்லாம் சந்தித்து வந்தவர். அவர் பொறுப்புக்களை ஏற்று நடத்திவருகையில், சில காலங்களுக்குப் பின் டொறொன்டோ உலகத் தமிழர் தலைமைப்பீடத்துடன் முறுகல் ஏற்பட்டது. அப்படி முரண்பாடு ஏற்பட்டு மூன்றாம் நாள், RCMP இனரால் விசாரிக்கப்பட்டார்.
ரொறொன்டோ நகரில் மாணவர்களால் ஆர்ப்பாட்டம் அமெரிக்க தூதரகத்திற்கு முன்னாள் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கையில், உலகத் தமிழர் அமைப்பு தனியாக Queens Park இல் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். போதாததற்கு ஒருவரை “சாகும்வரை உண்ணாவிரதம்” என்று கொண்டுவந்து இருத்தினார்கள். பிறகு பார்த்தால் அவர் இலங்கை அரசாங்கத்தின் பக்கம் சார்ந்தவராம்.
தங்களின் அதிகாரத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. தங்களின் தலைமைப்பீடத்திற்கு குந்தகம் விளைவிக்கும் நபர்களைத் தாங்களே காட்டிக்கொடுக்கும் எழிய கலாச்சாரம் நிலவுகிறது.
உலகத் தமிழ் அமைப்பு தலைவரின் கட்டளையை மீறியதா?
இந்த நேரத்தில், பத்மநாதன் வெளிநாடுகளில் உள்ள உலகத் தமிழர் அமைப்புகளுடன் ஒரு கூட்டம் வைத்தார். அதில், தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை உலகத் தமிழ் மக்களுக்கு அறிவியுங்கள் என்று சொன்னார். ஆனால், இந்த உலகத் தமிழ் அமைப்பு அதை செய்ய மறுத்துவிட்டது. அப்படிச் சொன்னால் ஒருவரும் அதற்குப் பின் காசு தரமாட்டார்கள் என்ற காரணத்தை முன்வைத்தது.
இப்படி இவர்கள் பொதுமக்களுக்கு அறிவிக்க மறுத்த கட்டாயத்தாலேயே பத்மநாதன் தானாக அறித்தார். அவர் நேரடியாக ஊடகங்களுக்கு தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை அறிவித்தார். இதைப் பொறுக்க முடியாத வெளிநாட்டு உலகத் தமிழர் அமைப்பின் தலைமைப்பீடம், பத்மநாதனின் இருப்பிடத்தைக் காட்டிக்கொடுத்துவிட்டது. அவர் வெளியில் வந்து பலருடனும் தொடர்பு கொள்ளவேண்டிய நிலை, இந்த உலகத் தமிழர் அமைப்பினாலேயே ஏற்பட்டது.
தலைவர் இறந்துவிட்டார். அவரின் இடத்தை இவர் பிடிக்க தானே அறிக்கைகளை விடுகிறார். இவர் தம்பட்டம் அடிக்கிறார். இவர் துரோகி என்று ஒரு தரப்பு. தலைவர் இறந்துவிட்டார் என்று அவர் எப்படி அறிவிக்கலாம்? தலைவர் சாகமாட்டார். இவர் சூழ்ச்சி செய்யப் பார்க்கிறார். அவரை யாராலும் கொல்ல முடியாது என்று இன்னுமொரு தரப்பு. சரி இரண்டு விதமாகவும் நிலையை ஆராய்ந்து பார்ப்போம்.
தலைவர் இறந்துவிட்டார்
உண்மையில் தலைவர் இறந்துவிட்டார் என்றால், அதை உலகத் தமிழ் மக்களுக்கு அறிவிக்கவேண்டிய கட்டாயம் உண்டல்லவா? தமிழீழத்திற்காய் எவ்வளவோ செய்த எம் தேசியத் தலைவருக்கு ஒரு அஞ்சலி கூட வைக்காவிட்டால் நாமெல்லாம் இருந்து என்ன பயன்? பல போராளிகளுக்கு நினைவஞ்சலி செய்கிறோம், தியாகிகளுக்கு நினைவஞ்சலி செய்கிறோம் ஆனால் எம் தலைவர் இதற்குக் கூட பாக்கியமற்றவராக அல்லவா போய்விட்டார்? அவர் தன் வாழ்க்கையையே தமிழீழத்திற்காய் தியாகம் செய்து இறுதியில் ஒரு அஞ்சலி கூட கிடைக்காமல் போய்விட்டார்.
அதை விட, தலைவர் இறந்துவிட்டார் என்ற உண்மையை அறிவித்திருந்தால், உலகத் தமிழர்கள் பொங்கி எழுந்திருப்பார்கள். போராட்டங்கள் தீப்பிளம்பாய் வெடித்திருக்கும். தமிழகத்தில் எம் சகோதரர்கள் அடங்கிப் போனதற்கு இந்தக் குழப்பமும் ஒரு காரணம். வைகோ சொல்கிறார் பத்மநாதன் துரோகி என்று. நெடுமாறன் சொல்கிறார், தலைவர் இறக்கவில்லை, சத்தியமாக உயிரோடு தான் இருக்கிறார் என்று. வைகோ சொல்கிறார் நான் தொலைபேசியில் கதைத்தேன் என்று. எனக்கு சரத் பொன்சேகா தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் “கோமாளிகள்” என்று சொன்னது தான் ஞாபகம் வந்தது. வெளிநாட்டு உலகத் தமிழர் அமைப்புக்கள் தலைவர் இறந்துவிட்டார் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. பத்மநாதன் தனியொருவர் தான் அப்படி சொல்கிறார். ஆகவே தலைவர் உண்மையில் இறக்கவில்லை என்றும் யோசித்தார்கள். இப்படிப்பட்ட கூற்றுக்களால் தான் தமிழ்நாடு குழம்பிப் போய்விட்டது. தமிழ்நாடு, மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவரும் வெறும் புஸ்வானமாய்ப் போய்விட்டோம். இறந்ததாக எல்லோரும் அறிவித்திருந்தால் உலகில் பல பாகங்களில் வற்புறுத்தி/போரட்டங்கள் நடத்தி யாவது ஏதாவது நடந்திருக்கலாம். இப்படி ஏதாவது போராட்டம் வெடித்தாவது ஒரு பாதையில் முன்னகர்ந்திருப்போம். நாம் அந்த சந்தர்ப்பத்தை இப்போது இழந்துவிட்டோம். இனிமேல் என்னால் தலைவரை எண்ணி அழக்கூட முடியாது. தலைவர் உண்மையில் இறந்திருந்தால், உலகத் தமிழர் அமைப்பு எவ்வளவு சுயநலமிக்கது என்று எண்ணிக் கவலைப்படுவார்.
தலைவர் இறக்கவில்லை
தலைவர் இறக்கவில்லை என்றால், பத்மநாதன் அறிவித்தது தலைவரின் கட்டளையைத் தானே? தலைவர் உயிருடன் இருந்துகொண்டு தான் இறந்ததாக அறிவி, அப்போது தான் வெளிநாட்டு அரசாங்கங்கள் புலிகள் ஒழிந்துவிட்டார்கள், இனிமேலாவது இலங்கை அரசை நிறுத்தி தமிழர்களுக்கு ஏதாவது உரிமை கொடுக்கட்டும் என்று யோசித்துச் சொல்லியிருப்பார். இதில் வேடிக்கை என்னவென்றால், சிலர் தலைவர் சொன்னால் தான் நம்புவோம் என்று சொல்கிறார்கள். இது எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கிறது என்று நான் விளக்கவேண்டியதில்லை.
தலைவர் இட்ட கட்டளையை பத்மநாதன் செயற்படுத்த, உலகத் தமிழர் அமைப்புக்கள், மறுத்துவிட்டன. தங்களின் அதிகாரத்தை இழக்கிறோம் என்ற பயத்தில் தலைவரின் கட்டளையையே மீறிவிட்டார்கள். போதாததற்கு பத்மநாதனைக் காட்டிக்கொடுத்து தேசத் துரோகத்தையும் செய்துவிட்டார்கள். தலைவர் உயிருடன் இப்போது இருக்கிறார் என்றால், தான் போட்ட திட்டத்தை உலகத் தமிழர் அமைப்பு நொறுக்கிவிட்டது என்ற வேதனையில் இருப்பார்.
சனநாயக வாக்கெடுப்பு
இப்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடனும் ஒரு முறுகல் நிலையிலேயே உலகத் தமிழர் அமைப்புக்கள் இருக்கின்றது. அதிகாரம் முளுவதும் உருத்திரகுமார் மற்றும் சிலர் [வெள்ளைக்காரர்கள் உட்பட] கைகளில் தான் இருக்கிறது என்ற ஆதங்கத்தில் இருக்கிறார்கள். தங்களது பிரதிநிதிகளை அதிகப்பெரும்பான்மையாக நுளைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த நாடு கடந்த தமிழீழ அரசின் சனநாயகத் தேர்தலில் உலகத் தமிழர் அமைப்பைத் தவிர்ந்தவர்களுக்கு வாக்குப் போடாதீர்கள் என்று வாக்குச் சாவடி வாசலில் வைத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இது ஒரு மிகவும் அநாகரீகமான செயல். இவருக்கு வாக்களியுங்கள் என்று சொல்லலாம். ஆனால், இவருக்கு வாக்களியாதீர்கள் என்று வாக்களிக்க வரும் ஒவ்வொருவருக்கும் சொல்வது அவர்களது ஈனப்புத்தியையே காட்டுகிறது. அதனாலேயோ என்னமோ, கனடா உலகத் தமிழர் அமைப்பு தாங்களும் ஒரு வாக்கெடுப்பு நடத்தி கனடாவிற்குள் மட்டும் ஒரு தனி “சனநாயக” அமைப்பை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். அவர்களின் வாக்கெடுப்பு சில தினங்களில் நடைபெறப்போகிறது.
நான் உலகத் தமிழர் அமைப்பின் தலைமைப்பீடத்தில் தான் நிர்வாகக் குறைகேடுகள் இருக்கிறது என்று சொல்கிறேனே தவிர ஒட்டுமொத்த உலகத் தமிழர் அமைப்பு போராளிகளையும் அல்ல. அனேகமானவர்கள் சத்தியமான தமிழீழக் கனவோடு நாட்டுக்காகவும், தலைவருக்காகவும் உழைப்பவர்கள். தலைமைப்பீடத்தின் குறைகள் அனேகமான உலகத் தமிழ் அமைப்பு போராளிகளுக்குத் தெரியும். அவர்களும் அந்த நிர்ப்பந்தத்தை உணர்ந்தவர்கள் தான். இருந்தாலும் நாட்டுக்காய், தலைவர் ஒருவருக்காய் எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டவர்கள். தங்கள் பொன்னான நேரத்தையும், பாதுகாப்பையும் பொருட்படுத்தாதவர்கள். பல தமிழர்கள் குறை கூறுவார்கள், உலகத் தமிழர் அமைப்பில் இருந்தால் சம்பளம் கிடைக்கும். நாங்கள் கொடுக்கும் காசுகள் எல்லாம் அவர்கள் சம்பளம் என்று எடுத்துக்கொள்கிறார்கள் என்று. நான் கேட்கிறேன் எத்தனை பேர் வீடு வீடாகச் சென்று பேப்பர் போடவோ, மக்களின் சினங்கல்களுக்கும், பேச்சுக்களுக்கும் மத்தியிலும் காசு சேர்க்கத் தயாராக உள்ளீர்கள்? எத்தனை வீடுகளில் முகத்தில் அடித்தாற்போல் பேசுவார்கள். நாயைவிடக் கேவலாமகக் கூட துரத்துவார்கள். இவற்றை எல்லாம் சமாளித்துவிடலாம் கூட. ஆனால், நீங்கள் புலிகளுக்கு காசு சேர்க்கிறீர்கள் என்று RCMP (அ) காவல்துறை கைதுசெய்யும் மிகப் பெரிய பாதுகாப்பு ஆபத்து இருக்கிறது. தங்கள் மனைவி, பிள்ளைகளையும் தாண்டி இப்படி ஒரு ஆபத்தை ஏற்க உங்களில் எத்தனை பேர் தயாராக உள்ளீர்கள்? சும்மா சம்பளம் எடுக்கிறார்கள் என்று குறை கூறுவதைத் தவிர உங்களால் ஆக்கபூர்வமாக எதைச் செய்ய இயலும்?
பத்மநாதன் இலங்கை அரசில் பிடிபட்டது உண்மையில் யாருக்கு இழப்பு? அவரின் அதிகாரத்தை புலிகள் அமைப்பிலிருந்து நீக்கியது உலகத் தமிழர் அமைப்பிற்கு நன்மையாக இருக்கலாம். ஆனால், பத்மநாதனின் பல வருட உழைப்பு இப்போது போய்விட்டது. அவர் பிடிபட்டதால், அவருடன் தொடர்பு வைத்திருக்கும் பல புலி பெரும்புள்ளிகள் எல்லாம் மாட்டுகிறார்கள். இதனால் மொத்த இழப்பு நமக்குத் தான். நம் தலைவருக்கும் தான்.